குறைந்த விலை....தரமான மது: சந்திரபாபு நாயுடுவின் வாக்குறுதி
8 சித்திரை 2024 திங்கள் 12:23 | பார்வைகள் : 1923
இன்னும், 40 நாட்களில் ஆந்திர சட்டசபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தரமான மது விற்பனை செய்யப்படும்; அதுவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்'' என தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார்.
ஆந்திராவில் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் சட்டசபை, லோக்சபா என இரண்டிற்கும் சேர்த்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
ஆந்திராவில் மதுபானங்களின் தரம் மற்றும் அதிக விலை ஆகியவற்றை முன்வைத்து, நீண்ட காலமாக ஆளும் அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால், குறைந்த விலைக்கு தரமான மது விற்பனை செய்யப்படும் என்ற வாக்குறுதியை சந்திரபாபு நாயுடு அளித்துள்ளார்.
அதிக விலை
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று 2019 சட்டசபைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி, கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார்.
மதுபானங்களின் விலை உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்துள்ளன. நான் மதுபானத்தைக் குறிப்பிடும்போது எங்கள் இளைய சகோதரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெகன் மோகன் ரெட்டிதான் விலையை 60 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தி, அதில் 100 ரூபாயை தனது பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார். இன்னும், 40 நாட்களில் ஆந்திர சட்டசபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தரமான மது விற்பனை செய்யப்படும்; அதுவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.