பிரதமர் மோடி இன்று வாகன பேரணி: சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
9 சித்திரை 2024 செவ்வாய் 00:46 | பார்வைகள் : 1796
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
பா.ஜனதா கட்சியை பொறுத்தவரை பிரதமர் மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்தில் பிரசாரம் செய்துவிட்டார். அதேபோல் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுமிருதி இரானி மற்றும் பல்வேறு தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்தநிலையில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார்.
இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகை தருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு செல்கிறார். அங்கு, பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்கிறார்.
2 கிலோ மீட்டர் வரையிலான இந்த பேரணியின்போது, பா.ஜனதா வேட்பாளர்கள் பால்கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), பொன்.பாலகணபதி (திருவள்ளூர்), பா.ம.க வேட்பாளர்கள் கே.பாலு (அரக்கோணம்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சீபுரம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கிறார்.
வாகன பேரணியின்போது, சாலையின் இருபுறங்களிலும் பா.ஜனதா தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் வாகன பேரணி நடைபெறுவதையொட்டி சென்னை ஜி.எஸ்.டி. சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தியாகராய நகர் ஆகிய இடங்களில் இன்று பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகனம் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட சாலைகளில் வணிக வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும்.
அதாவது, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் வாகனங்கள், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், சிப்பெட்டிலிருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள், கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள், சிபிடியில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள், டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணியை முன்னிட்டு சென்னை பெருநகரில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.
மேலும், பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியையொட்டி அந்த பகுதி முழுவதும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தியாகராய நகர் வாகன பேரணிக்கு பிறகு, சென்னை கிண்டி ராஜ்பவனில் பிரதமர் மோடி இரவு தங்குகிறார். அப்போது, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக அவர் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் காலை 10 மணிக்கு வேலூர் செல்கிறார். அங்கு, பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
அதன்பிறகு, அரக்கோணம் விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து, மேட்டுபாளையம் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, நீலகிரி பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து, கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் மராட்டிய மாநிலத்துக்கு செல்கிறார். இதன்பிறகு, வருகிற 13, 14-ந்தேதிகளிலும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகை தர உள்ளது குறிப்பிடத்தக்கது.