ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாரிசு ஜெகன்மோகன் இல்லை
9 சித்திரை 2024 செவ்வாய் 00:52 | பார்வைகள் : 2622
ஆந்திராவில் என் தந்தை ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்கும், ஜெகனின் ஆட்சிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை,” என, மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா குற்றஞ்சாட்டிஉள்ளார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்ட சபைக்கும் தேர்தல் நடக்க உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் தான், ஜெகன்மோகன் ரெட்டி.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
'இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் களமிறங்கியுள்ளன. இங்குள்ள கடப்பா தொகுதியில் காங்கிரசின் மாநில தலைவரும், ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுகிறார்.
இதற்காக, கடப்பா தொகுதியில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மாநில முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி, மறைந்த ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாரிசு இல்லை. இருவரின் ஆட்சிக்கும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை.
பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் எதுவும் தெரியாது. என் தந்தை ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் விவசாயிகள் அரசர்களாக இருந்தனர். இன்று அவர்கள் ஏமாற்றப்பட்டு, கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆந்திராவில் கொலைகார அரசியல் நிலவுகிறது. கொலையாளிகள் அரசால் பாதுகாக்கப்படுகின்றனர். மாநில அரசின் அநீதிக்கு எதிராக போராடவே, இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.