அதிமுக., - திமுக இடையே தான் போட்டி: இ.பி.எஸ்., பேச்சு
9 சித்திரை 2024 செவ்வாய் 01:09 | பார்வைகள் : 2203
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாளை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: நாட்டு மக்கள் தான் அதிமுக.,வுக்கு எஜமானர்கள். எம்.ஜி.ஆர் மக்களுக்காக கட்சி நடத்தினார். குடும்பத்துக்காக நடத்தப்பட்ட கட்சி திமுக. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
நான் விவசாயி
விவசாயிகளின் கஷ்டத்தை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். நான் ஒரு விவசாயி. அதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துன்பங்கள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக கொண்டு வந்தது. எதில் எல்லாம் அதிக லாபம் வருமோ அந்த திட்டத்தை கொண்டு வந்து தங்களது கஜானாவை திமுக.,வினர் நிரப்பி கொள்கின்றனர்.
திமுக.,வுக்கு பாடம் புகட்டுங்கள்
காவிரி குண்டாறு திட்டத்தை திமுக அரசு ஏன் முடக்கியது என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். கச்சத்தீவு உரிமை பறிபோனதால், மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவ மக்களின் துன்பத்தை அகற்ற, கச்சத்தீவை மீண்டும் இந்தியா உடன் இணைக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக கண்டு கொள்ளவில்லை.
கச்சத்தீவு பிரச்னை
தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்னையை பா.ஜ.,வினர் எழுப்புகின்றனர். பார்லிமென்டில் அனுமதி பெறாமல் கச்சத்தீவை தாரை வார்த்தது தவறு என உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆட்சியில் இருக்கும் போது மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அவர்களை விடுவிக்க அதிமுக நடவடிக்கை எடுத்தது. இதுவரை எந்த கட்சியும் மீனவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை 3 தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தியது இல்லை. அதிமுக தான் நிறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.