நீர்நிலைகள் பராமரிப்பு பணி தனியாரிடம் விட அரசு முடிவு
10 சித்திரை 2024 புதன் 02:17 | பார்வைகள் : 1999
தனியார் பங்களிப்புடன் நீர்வள ஆதாரங்களை புனரமைத்து, பராமரிப்பதற்கான முயற்சியில், நீர்வளத்துறை இறங்கி உள்ளது.
நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள், 15க்கும் மேற்பட்ட ஏரிகள், பாசன கால்வாய்கள் உள்ளிட்டவை உள்ளன. மத்திய அரசின் அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ், அணைகளை புனரமைக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.
நிதியுதவி
அ.தி.மு.க., ஆட்சியில், 'நபார்டு' வங்கி கடனுதவியுடன், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் முறைகேடு நடந்தததாக கூறி, தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பணிகள் நிறுத்தப்பட்டன. மத்திய அரசு பங்களிப்புடன் ஏரிகளை புனரமைக்கும் திட்டத்திற்கு நிதியுதவி கோரப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு ஏரிக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு உறுதியாகாததால், பணிகளை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏரிகளை துார்வார திட்டமிடப்பட்டு உள்ளது.
அரசிடம் நிதி ஆதாரம் இல்லாததால், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வழக்கமாக புனரமைப்பு பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வது வழக்கம்.
பேச்சுவார்த்தை
அதன்பின், நிதி கிடைக்காமல் பராமரிப்பு பணிகளை, நீர்வளத்துறை நிறுத்தி வைக்கும். இதனால், மீண்டும் ஏரிகள் புதர் மண்டி, கரைகள் பாதித்து பழைய நிலைக்கு திரும்பும்.
எனவே, இம்முறை புனரமைப்பு பணிகளுடன் பராமரிப்பு பணிகளையும், தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள், வங்கிகள், ஐ.டி., நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன், நீர்வளத்துறையினர் பேசி வருகின்றனர்.