நம்பிக்கை வைத்து முதலீடு செய்த ஹர்திக் பாண்டியாக்கு நேர்ந்த கதி
11 சித்திரை 2024 வியாழன் 09:47 | பார்வைகள் : 1293
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த சகோதரரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரர் க்ருணால் பாண்டியாவும் சேர்ந்து அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியாவுடன் கடந்த 2021ம் ஆண்டு பாலிமர் தொழிலை தொடங்கினர்.
இதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா சேர்ந்து தலா 40 சதவீத முதலீட்டை வழங்கியுள்ளனர். வைபவ் பாண்டியா 20 சதவீத முதலீட்டை வழங்கியதோடு நிறுவனத்தை கையாளுவார் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த தொழிலில் இருந்து வரும் வருமானம் மூவருக்கும் சமமாக பகிரப்பட்டது. ஆனால், இரண்டு முதலீட்டாளர்களுக்கு தெரியாமலேயே வைபவ் பாண்டியா பாலிமர் தொழிலில் இன்னொரு நிறுவனத்தை நிறுவினார்.
இதனால், இரண்டு நிறுவனத்தை பார்க்க முடியாமல், முதல் நிறுவனத்தில் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தனக்கான லாபத்தை ரகசியமாக 20 சதவிகிதத்திலிருந்து 33.3 சதவிகிதமாக வைபவ் பாண்டியா உயர்த்தியுள்ளார்.
மேலும், பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் இருந்து தன்னுடைய கணக்கிற்கு 1 கோடி ரூபாய் வரை மாற்றியுள்ளார். இந்த சம்பவம் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியாவுக்கு தெரியவந்தவுடன், அவதூறு பரப்புவேன் என்று வைபவ் பாண்டியா மிரட்டியுள்ளார்.
இதனால், புகார் கொடுத்ததன் அடிப்படையில் வைபவ் பாண்டியாவை மும்பை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவும் , 2016ம் ஆண்டு க்ருணால் பாண்டியாவும் மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் அறிமுகமாகினர் என்பது குறிப்பிடதக்கது.