மருத்துவரை சந்திக்காமல் போனால் ஐந்து யூரோக்கள் அபராதம். எப்படி செலுத்துவது?
15 சித்திரை 2024 திங்கள் 10:08 | பார்வைகள் : 3510
பிரான்ஸ் அரசின் சுகாதார அமைச்சகம், ஒரு மருத்துவரை சந்திக்க நேரம் ஒதுக்கிவிட்டு அதனை ரத்து செய்யாமல் மருத்துவரை சந்திக்காமல் போனால், குறித்த நோயாளிக்கு "முயல் வரி" எனும் பெயரில் 5 யூரோக்கள் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை 2025க்கு முன்னர் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஐந்து யூரோக்கள் அபராதத்தை எப்படி நோயாளர்களிடம் இருந்து அறவிடுவது என்கின்ற நடைமுறை குறித்த சிக்கல் தற்போது தோன்றியுள்ளது.
மருத்துவர்களை சந்திக்க மக்கள் நேரம் ஒதுக்கும் தேடுதலமான www.Doctolib.fr எனும் தேடுதளத்தினையே மக்கள் அதிகம் பாவித்து வரும் நிலையில் குறித்த தேடுதளமான www.Doctolib.fr மக்களிடம் இருந்து வங்கி அட்டை மூலமாக பணத்தை அறவிடும் முறையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதேவேளை ஐந்து இலட்சம் பாவனையாளர்களை மட்டுமே கொண்டு மற்றுமொரு தேடுதளமான www.Maiia.com தாம் மக்களின் வங்கி அட்டைகளை பாவனைக்கு எடுத்துக் கொள்ள விரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளது.ஆனாலும் குறித்த தேடுதளத்தை 50% சதவீதத்திற்கும் குறைவான மருத்துவர்களே பாவனையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த சிக்கலை தீர்த்து வைப்பதற்கான புதிய நடைமுறைகளை அரசு ஆராய்ந்து வருகிறது.