லோக்சபா தேர்தலை கண்டு களிக்க 25 நாட்டு பிரதிநிதிகள்! வருகை
17 சித்திரை 2024 புதன் 00:57 | பார்வைகள் : 2161
லோக்சபா தேர்தல் பிரசாரம் மற்றும் ஓட்டுப்பதிவை நேரில் காண்பதற்கு, 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினருக்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல், வெளிநாடு செல்லும் போதெல்லாம், நம் நாட்டின் ஜனநாயகம் சீர்குலைந்துள்ளதாக விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தேர்தலை மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாக நடத்திக் காட்டும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் 19ல் துவங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஜூன் 4ல் முடிவுகள் வெளியாகின்றன. முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான, 'க்ளைமாக்ஸ்' பிரசாரம் அனல் பறக்கிறது.
எதிர்பார்ப்பு
இந்த லோக்சபா தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் நிர்வாக நடைமுறைகளை நேரில் காண, 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது.
இதுவரை, 15 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர். இலங்கை, வங்கதேசம், தான்சானியா, மொரீஷியஸ், உகாண்டா உள்ளிட்ட நாடுகள் அதில் அடங்கும். மேலும் பல நாடுகள், இன்னும் சில தினங்களில் பங்கேற்பை உறுதி செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர்பிரத்யுஷ் காந்த் கூறியதாவது:
காங்கிரஸ் எம்.பி., ராகுல், வெளிநாடு செல்லும் போது, இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைந்துள்ளது என, புலம்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.
எனவே, பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரம் மற்றும் நம் நாட்டின் தேர்தல் நடைமுறை எவ்வளவு வெளிப்படைத் தன்மையுடன் நடக்கிறது என்பதை, உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் நேரில் கண்டு உணர வேண்டும் என, முடிவு செய்தோம்.
அதற்காக, 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரில் வந்து களத்தில், 'மோடி மேஜிக்'கை காணும் போது, ராகுல் சொன்னது உண்மையா, பொய்யா என்பதை உணர்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்பாடுகள்
வெளிநாடுகளில் இருந்து வரும் அரசியல் கட்சியினருக்கு, நம் நாட்டின் தேர்தல் நடைமுறை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
அதன்பின் அவர்கள், நான்கு முதல் ஐந்து நபர்கள் அடங்கிய தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகளை காண, களத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக, பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மூன்று மற்றும் நான்காம் கட்ட ஓட்டுப்பதிவின் போது, இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மொத்தம் மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு அரசியல் கட்சியினர், பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் பணிகளை நேரில் காண, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.