அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை தமிழ் பெண்கள்
17 சித்திரை 2024 புதன் 16:46 | பார்வைகள் : 2492
அவுஸ்திரேலியாவில் புதிய குடியேற்ற மசோதா சட்டமாக்கப்பட்டால், தானும், தனது தாயும், சகோதரியும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என 19 வயதான பியுமெதர்ஷிகா கனேஷன் தெரிவித்துள்ளார்.
தாதியர் மாணவியான பியுமெதர்ஷிகா கனேஷன், தனது குடும்பத்துடன் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதுடன், சிறையில் அடைக்கப்படும் அல்லது நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மனித உரிமைகளுடன் முற்றிலும் பொருந்தாதவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மசோதாவை அரசாங்கம் கைவிட வேண்டும் என சட்டத்தை ஆய்வு செய்யும் செனட் குழுவிடம் மனித உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளன.
கடந்த மாதம், நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் நபர்களை ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க அனுமதிக்கும் சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், "குறித்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால் சிறையில் அடைக்கப்படக்கூடியவர்களில் நானும் ஒருவர்" என்று பியுமெதர்ஷிகா கனேஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய, குர்திஷ், தெற்கு சூடான் மற்றும் ஜிம்பாப்வே சமூகங்கள் உட்பட பல புலம்பெயர் குழுக்கள் புதிய மசோதாவின் கீழ் குடிவரவு அமைச்சருக்கு வழங்கப்படும் அதிகாரங்களை எதிர்த்துள்ளன.
சட்டத்தை ஆய்வு செய்யும் செனட் குழுவின் முன் சாட்சியமளித்த மனித உரிமைகள் சட்ட மையத்தின் (HRLC) மூத்த சட்டத்தரணி லாரா ஜோன், தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று குழு பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்த மசோதா "புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சமூகங்கள் மீதான தாக்குதல்" என்று மனித உரிமைகள் சட்ட மையத்தின் சட்டப் பணிப்பாளர் சன்மதி வர்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் ஏன் இத்தகைய வலுவான அதிகாரங்களைக் கொண்டிருக்க முற்படுகிறார் என கேள்வியெழுப்பிய அவர், பியுமெதர்ஷிகா போன்றவர்கள் பாதிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.