D ரக ஆயுதங்களிற்குத் தடை!! பாரிய குற்றப்பணம்!!
20 சித்திரை 2024 சனி 20:03 | பார்வைகள் : 3132
ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் கத்தி உட்பட D ரக ஆயுதங்கள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றது. இதனை யாரும் கொண்டு திரிந்தால் கடுமையான குற்றப்பணம் விதிக்கப்படுவதுடன், அவர்களின் குற்றப்பதிவிலும் பதிவு செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சுத் தெரிவித்துள்ளது.
பெரிய கத்தி, மடக்கி வைக்கும் கத்தி, மடக்கி வைத்து பின்னர் நீட்டடிக்கப்படும் இரும்புத் தடி (matraque telescopique), விரல்களில் போட்டுத் தாக்கும் நக்கிள்ஸ்( coup de poing américain) மற்றும் 100 மில்லி லீற்றர் அல்லது அதற்கும் கூடிய அளவுள்ள கண்ணீர்ப் புகை (aérosols lacrymogènes) போன்றவற்றை வெளியில் செல்லும் போது கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே D ரக ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை. ஆனால் அவற்றை உபயோகிப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் உண்டு.
முதற்கட்டமாக குறிப்பிட்ட பகுதிகளில் இவற்றில் ஒன்றைக் கொண்டு சென்றால் 500 யூரோவில் இருந்து குற்றப்பணம் விதிக்கப்படும்.
இந்தத் தடை முதற்கட்டமாக Bobigny, Bordeaux, Lille, Lyon, Marseille, Montpellier, Nantes, Nice, Pontoise, Rennes, Saint-Etienne, Toulouse ஆகிய பகுதிகளிலும் அதனைத் தொடர்ந்து பரிஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அமுல்படுத்தப்படும் எனவும், அதன் பின்னர் இது தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், குற்றவியல் விவகாரங்கள் மற்றும் மன்னிப்பு இயக்குநரகமான DACG (Direction des affaires criminelles et des grâces) அறிவித்துள்ளது.