இஸ்ரேல் முன்னெடுத்த வான்வழித் தாக்குதலில் 18 சிறார்கள் பலி
22 சித்திரை 2024 திங்கள் 09:20 | பார்வைகள் : 2320
காஸா பிரதேசமான ரஃபா மீது வார இறுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த வான்வழித் தாக்குதல்களில் 18 குழந்தைகள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலியப் படைகள் காசா பகுதியின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தத் தயாராகி வரும் வேளையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை இரவு ரஃபாவைத் தாக்கிய இஸ்ரேலிய ஏவுகணைகள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 22 உறுப்பினர்களைக் கொன்றன.
அவர்களில் 18 பேர்கள் குழந்தைகள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்களில் தந்தை ஒருவர், அவரது மூன்று வயது குழந்தை மற்றும் கர்ப்பிணி மனைவியும் இருந்துள்ளார்.
ஆனால் குழந்தை காப்பாற்றப்பட்டதாக குவைத் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தினசரி விமானத் தாக்குதல்களால் ரஃபா நகரம் சின்னாபின்னமாகி வருகிறது.
இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி தரைவழி தாக்குதலையும் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பிரதமர் நெதன்யாகு தெரிவிக்கையில், வரும் நாட்களில், ஹமாஸ் மீதான அரசியல் மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரிப்போம்.
பணயக்கைதிகளை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி இதுதான் என்றார்.
ஆனால் பணயக்கைதிகளை மீட்க நெதன்யாகு அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஸாவின் 2.3 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் ரஃபாவை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.