லோக்சபா தேர்தல்: பறிமுதல் தொகை ரூ.1,308.51 கோடி
23 சித்திரை 2024 செவ்வாய் 00:58 | பார்வைகள் : 1404
தமிழகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில், 1,308.51 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த மார்ச் 16 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அனைத்து தொகுதிகளிலும், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் கடந்த 20ம் தேதி வரை, 179.84 கோடி ரூபாய் ரொக்கம்; 7.91 கோடி ரூபாய் மதுபானங்கள்; 1.17 கோடி ரூபாய் போதைப் பொருட்கள்; 1,083.79 கோடி ரூபாய் மதிப்பு தங்கம், வெள்ளி, வைர நகைகள்; 35.80 கோடி ரூபாய் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு 1,308.51 கோடி ரூபாய். இம்முறை தனியார் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்பட்ட, 1,425 கிலோ தங்கம் பறிமுதல் காரணமாக, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகமானது.
அந்த தங்கம், உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.