நெதன்யாகுவுக்கு எதிராக ஒன்று கூடிய இஸ்ரேல் மக்கள்...
7 சித்திரை 2024 ஞாயிறு 10:18 | பார்வைகள் : 3344
காஸா மீதான போர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களாக தொடர்ந்து வருகின்றது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக சதுக்கம் என தற்போது அறியப்படும் பகுதியில் சுமார் 100,000 மக்கள் திரண்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் என்றே மக்கள் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஸாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரானது ஞாயிறன்று 7வது மாதத்தில் நுழைகிறது.
தலைநகர் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெதன்யாகுவும் கூட்டத்தையும் வீட்டுக்கு அனுப்பாதவரை, இந்த நாடு வளர்ச்சி காண வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் Yair Lapid தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல் அவிவ் பேரணியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும், எதிர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் டெல் அவிவ் போராட்டக்காரர்களுடன் காசா பணயக்கைதிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த திடீர் தாக்குதலில் 1,170 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றே இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட பதிலடிக்கு இதுவரை 33,137 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றே ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 250 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் படைகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
காஸாவில் இன்னும் 129 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் களமிறங்க உள்ளனர்.
ஜெருசலேமில் ஒரு பேரணிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.