Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தீர்மானம்...  சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் மேன்முறையீடு நிராகரிப்பு

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தீர்மானம்...  சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் மேன்முறையீடு நிராகரிப்பு

7 சித்திரை 2024 ஞாயிறு 11:01 | பார்வைகள் : 1592


குத்துச்சண்டை விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பு என்ற அந்தஸ்திலிருந்து தன்னை நீக்கியமைக்கு எதிராக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஐ.பி.ஏ.) தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அச்சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐ.ஓ.சி) 2019 ஆம் ஆண்டு இடைநிறுத்தியது.

அதையடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளை ஐ.ஓ.சி.யே நிர்வகித்தது.

கடந்த வருடம், ஒலிம்பிக் குடும்பத்திலிருந்து சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தை ஐ.ஓ.சி. நீக்கியதுடன், பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் குத்துச்சண்டைப் போட்டிகளை நிர்வகிக்கும் பொறுப்பை தனது குத்துச்சண்டை பிரிவிடம் கையளித்துள்ளது.

இத்தீர்மானங்களுக்கு எதிராக, சுவிட்ஸர்லாந்தில் தலைமையகத்தைக் கொண்ட சர்வதேச விளையாட்டுத்துறை நீதிமன்றமான விளையாட்டுப் பிணக்குத்  தீர்ப்பாயத்தில் ஐ.பி.ஏ. மேன்முறையீடு செய்தது.

இம்மனுவை மேற்படி தீர்ப்பாயகம் கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

நிதியியல் வெளிப்படைத்தன்மை மற்றும் நடுவர்கள், மத்தியஸ்தர்கள் தெரிவுகளில் தனது நேர்மையை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ப அது தொடர்பான செயன்முறைகளில் ஐ.பி.ஏ. மாற்றங்களை செய்யவில்லை என அத்தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த உமர் க்ரேம்லேவை தலைவராகக் கொண்ட ஐ.பி.ஏ. தான் மேற்கொண்ட சீர்திருத்தங்களை  சர்வதேச ஒலிம்பிக் குழுவும், விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயமும் கவனிக்கத் தவறிவிட்டன என விமர்சித்துள்ளது.

 இத்தீர்ப்பை சர்வதேச ஒலிம்பிக் குழு வரவேற்றுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை விளையாட்டும் இடம்பெறும். 

லொஸ் ஏஞ்சலஸ்  2028 ஒலிம்பிக்கில் இதை தொடர்வதற்கான திட்டம் இல்லை என சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 2028 ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை ஒரு விளையாட்டாக இல்லை எனவும் இந்நிலையை மாற்ற வேண்டுமானால்,  2028 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளை நிர்வகிப்பதற்கு 2025 முற்பகுதியில் ஒரு சர்வதேச சம்மேளன பங்காளர் தனக்குத் தேவை எனவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. 

ஓலிம்பிக் குத்துச்சண்டையின் எதிர்காலமானது தேசிய ஒலிம்பிக் சம்மேளனங்கள் மற்றும் தேசிய குத்துச்சண்டை சங்கங்களிடமே தங்கியுள்ளது எனவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்