தமிழகத்தில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் உயரும் : பிரசாந்த் கிஷோர் கணிப்பு
7 சித்திரை 2024 ஞாயிறு 16:46 | பார்வைகள் : 1609
வரும் லோக்சபா தேர்தலில் கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பா.ஜ.,வுக்கு கணிசமான ஓட்டு கிடைக்கும். தமிழகத்தில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் உயரும். 300க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்' என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் பா.ஜ., முதல் அல்லது இரண்டாவது கட்சியாக உருவாகலாம். நிச்சயம் அவர்கள் ஒடிசாவில் முதலிடத்தைப் பெறுவார்கள். தெலுங்கானாவில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை பா.ஜ., பிடிக்கும். கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் கணிசமான ஓட்டு கிடைக்கும்.
தமிழகத்தில் ஓட்டு சதவீதம் உயரும்
தமிழகத்தில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் நிச்சயம் உயரும். முதல்முறையாக ஓட்டு சதவீதத்தில் பா.ஜ., இரட்டை இலக்கத்தை பெறும். 300க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமையும்.
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு எத்தனை முறை விஜயம் செய்தார் என்பதை ராகுல், சோனியா மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் யோசித்து பாருங்கள். எதிர்க்கட்சியினர் (ராகுல்) மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். பிறகு நீங்கள் எப்படி வெற்றி பெறுவீர்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.
வயநாட்டில் வெற்றி; எந்தப் பலனும் இல்லை!
அமேதியில் போட்டியிட ராகுல் தயக்கம் காட்டுவது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: கேரளாவை வெல்வதன் மூலம் எதிர்க்கட்சியால் நாட்டை வெல்ல முடியாது. உ.பி., பீஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நீங்கள் வெற்றி பெறாமல், வயநாட்டில் வெற்றி பெற்றால் எந்தப் பலனும் இல்லை. 2014ம் ஆண்டு மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தைத் தவிர உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் போட்டியிட தொகுதியைத் தேர்வு செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.