மாரி 2 படத்துக்கு பின் டொவினோ தாமஸ் தமிழில் நடிக்காதது ஏன் ?
10 வைகாசி 2024 வெள்ளி 10:06 | பார்வைகள் : 2030
மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டவர் டொவினோ தாமஸ். வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து படங்களாவது கொடுத்து விடும் இவர் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கதைக்களமாகவும், புதிய கதாபாத்திரமாகவும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் டொவினோ தாமஸ். அந்தபடம் மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும் கூட அதில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வில்லனாக நடித்திருந்த டொவினோ தாமஸ் ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டார்.
அதற்கடுத்து அவர் மலையாளத்தில் நடித்த மின்னல் முரளி உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நன்கு வரவேற்பை பெற்றுள்ளார். இந்தநிலையில் மாரி-2 படத்துக்கு பிறகு ஏன் தமிழில் நடிக்கவில்லை என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய டொவினோ தாமஸ், “அந்த சமயத்தில் மலையாளத்தில் கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகி இருந்தேன். இங்கே தமிழில் ஒரு படம் நடிப்பதற்குள் அங்கே மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து விடலாம். அந்த படங்களை ஒதுக்கி வைத்து விட்டு தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது வரை அதுதான் தொடர்கிறது. நேரமும் நல்ல கதை அமையும்போது நிச்சயம் தமிழில் நடிப்பேன்” என்று கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.