தப்பி ஓடிய சிறைக்கைதி! - யார் இந்த Mohamed Amra??
14 வைகாசி 2024 செவ்வாய் 15:24 | பார்வைகள் : 6951
இன்று காலை 11 மணி அளவில் சிறைச்சாலை வாகனம் ஒன்று தாக்கப்பட்டு, அதில் சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட Mohamed Amra எனும் கைதி தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பிக்க வைக்கும் அளவுக்கு யார் இந்த Mohamed Amra எனும் குற்றவாளி..??!
30 வயதுடைய குறித்த குற்றவாளி Dreux நகரைச் சேர்ந்தவர். 2022 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி Marseille நகரில் வைத்து ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் போதைப்பொருள் கடத்தல், கொள்ளைச் சம்பவங்கள் என அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துக்கொண்டே சென்றது.
அதேபோல், வீதி சமிக்ஞைகளை மதிக்காமல் சென்றமை, மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியமை, அதிவேகமாக பயணித்தமை உள்ளிட்ட சிறிய குற்றங்களும் அவர் மீது பதியப்பட்டுள்ளன.
குறிப்பாக வீதிகளில் மின்னல் வேகத்தில் பயணிப்பது அவரது அடையாளமாகும். அதனாலேயே அவருக்கு The Fly எனும் புனைபெயரும் உண்டு.
இன்று, காலை Rouen நிதிமன்றத்தில் இருந்து Évreux சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் முற்பகல் 11 மணிக்கு A154 நெடுஞ்சாலையில், Incarville சுங்கவரி பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் வழிமறிக்கப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பிச் செல்லவைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டமை பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.