3 அரசு மையங்களில் மட்டும் மஞ்சள் தடுப்பூசிக்கு அனுமதி
15 வைகாசி 2024 புதன் 01:01 | பார்வைகள் : 2153
ஆப்ரிக்கா, தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்பவர்கள், மூன்று அரசு மையங்களில் மட்டுமே, மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுபவர்களை, விமான நிலைய நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை, என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
ஆப்ரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்காவில் சில நாடுகளுக்கும் செல்பவர்கள், கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும்.
இந்த ஊசி போட்டுச் சென்றால் மட்டுமே, அந்த நாடுகளுக்கு செல்ல அனுமதி கிடைக்கும். அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் போதும், தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
முதலில், சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. பின், தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில், மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், வெளிநாடு செல்ல விமான நிலைய நிர்வாகம் அனுமதிப்பதில்லை.
அதனால், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகம், சென்னை மற்றும் துாத்துக்குடி துறைமுகங்களில் உள்ள மருத்துவ மையங்கள் என, மூன்று இடங்களில் மட்டுமே மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டு, விமான நிலையம் சென்று அவதிப்பட வேண்டாம்.
மத்திய அரசு அங்கீகரித்துள்ள மூன்று மையங்களில் மட்டும் உரிய கட்டணம் செலுத்தி, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், கர்ப்பிணியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்களின் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், ஜூன் 6க்கு பின், மத்திய அரசு அதிகாரிகளோடு பேசி, விரைவாக நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.