பிரித்தானியாவில் பரவும் 100 நாள் இருமல் - பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
15 வைகாசி 2024 புதன் 10:59 | பார்வைகள் : 1802
பிரித்தானியாவில் 100 நாள் தொடர்ச்சியாக இருமல் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், முகக் கவசம் மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் திரும்பலாம் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தீவிரமான இருமல் பாதிப்பு பாடசாலை மாணவர்களை 3 வாரங்கள் வரையில் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும், குழந்தைகள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் போது முகக் கவசம் அணியுமாறு பெற்றோருக்கு NHS மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஆண்டு பிறந்து மூன்று மாதங்களில் மட்டும் 2,793 பேர்களுக்கு 100 நாள் இருமல் பாதித்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரித்தானியாவின் குறிப்பிட்ட பகுதியில் பெற்றோர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொற்று பரவாமல் இருக்க, சுகாதார மையம் செல்லும் பெற்றோர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். Middlesex பகுதி மருத்துவமனை ஒன்று, மருத்துவருடன் நேரில் சந்திக்கும் அனுமதி பெற்றிருந்தால், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, தட்டம்மை மற்றும் 100 நாள் இருமல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக லண்டனில் உள்ள வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட் மருத்துவ மையம் மின்னஞ்சல் மூலம் அப்பகுதி மக்களை எச்சரித்துள்ளது.
NHS மருத்துவர்கள் ஏற்கனவே 100 நாட்கள் இருமல் தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சிறார்களை எச்சரித்து வருகின்றனர். 100 நாள் இருமல் என்பது நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களின் பாக்டீரியா தொற்று ஆகும்.
இது மிக எளிதாக பரவி சில சமயங்களில் கடுமையான சிக்கல்களை உண்டாக்கும். பிஞ்சு குழந்தைகள் மற்றும் சிறார்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.