Paristamil Navigation Paristamil advert login

300 பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை!

300 பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை!

16 வைகாசி 2024 வியாழன் 02:24 | பார்வைகள் : 701


பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த 300க்கும் மேற்பட்ட ஹிந்துக்களுக்கு நேற்று, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக நம் நாட்டுக்கு வந்துள்ள ஆறு சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் 2019ல் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மூன்று நாடுகளிலும் சிறுபான்மையினராக இருந்த ஹிந்து, சீக்கியர், கிறிஸ்தவர், பவுத்தர், சமணர், பார்சி மதத்தினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும்.

இதில், முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மூன்றுமே இஸ்லாமிய நாடுகள் என்பதால், அங்கே முஸ்லிம்களுக்கு துன்புறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை என, மத்திய அரசு பதிலளித்தது.

லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன், இந்த சட்டத்துக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன. சட்டமும் அமலுக்கு வந்தது.

இச்சட்டத்தின்படி, 2014 டிசம்பருக்கு முன், அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. அது, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை, 25,000த்துக்கு மேலானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். மூன்று நிலைகளில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

முதலில் மாவட்ட குழு பரிசீலனை. தபால் துறை கண்காணிப்பாளர் பதவிக்கு நிகரான ஒரு அதிகாரி தலைமையில், தகவல்களை குழு சரிபார்த்து, மாநில குழுவுக்கு பரிந்துரைக்கும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் இயக்குனர் அதன் தலைவர். இந்த குழு ஆய்வு செய்து, தேசிய குழுவுக்கு அனுப்பும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குடியுரிமை வழங்க உத்தரவு பிறப்பிக்கும்.

இந்த வகையில், முதல் கட்டமாக 300 பேருக்கு நேற்று, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இவர்கள் எந்த நாட்டவர் என்பதை அரசு தெரிவிக்கவில்லை. பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்துக்கள் என்று தெரிகிறது. டில்லியில் நடந்த எளிய நிகழ்ச்சியில், இவர்களில் 14 பேருக்கு உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா குடியுரிமை சான்றிதழை வழங்கினார்.

அமித் ஷா மகிழ்ச்சி

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். அண்டை நாடுகளில், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, நம் நாட்டுக்கு அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்; அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்ற உறுதியையும் அளிக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான், பிரதமர் மோடியின் வாக்குறுதியாகும்.இவ்வாறு ஷா கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்