Paristamil Navigation Paristamil advert login

கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது விரைவில் குற்றப்பத்திரிகை: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது விரைவில் குற்றப்பத்திரிகை: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

16 வைகாசி 2024 வியாழன் 14:36 | பார்வைகள் : 1685


டில்லி அரசின் மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை எதிர்த்த வழக்கில், அவருக்கு ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்தது.
அதே நேரத்தில் முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்திற்கு செல்லக் கூடாது, கவர்னரின் அனுமதியின்றி கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என நிபந்தனை விதித்து இருந்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு இன்று (மே 16) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ கூறுகையில், கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் அதனை செய்வோம். எங்களின் நடவடிக்கைகளில் அதுவும் உள்ளது'' எனக்கூறினார்.

தனிப்பட்ட கருத்து

இதனிடையே, இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவால், கடந்த திங்கட்கிழமை( மே 13) டில்லியில் பிரசாரம் செய்த போது, நீங்கள் ஆம் ஆத்மிக்கு ஓட்டளித்தால், நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருக்காது. ஜூன் 2ம் தேதி நான் மீண்டும் சிறை செல்வேன். அங்கிருந்து தேர்தல் முடிவை பார்ப்பேன். தேர்தலில் ‛ இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால், 5ம் தேதி நான் வெளியே வருவேன் எனப் பேசியிருந்தார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ‛‛தேர்தலில் ‛இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால் நான் சிறைக்கு போக வேண்டியிருக்காது என்று பிரசாரத்தில் கெஜ்ரிவால் சொல்கிறார். அவர் எப்படி இதைச் சொல்ல முடியும்.
இது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியது என்பது தெளிவாக தெரிகிறது. நீதித்துறையின் முகத்தில் அறைந்தது போல் உள்ளது'' எனக்கூறினார்.
கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், மத்திய அமைச்சர்கள் பலர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் கூறுகையில், கெஜ்ரிவாலின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. அவரின் அனுமானம். அது குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது. எங்களின் உத்தரவு தெளிவாக உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு இதுதான். சட்டத்தின் ஆட்சியின் படி நாங்கள் செயல்படுகிறோம்.நாங்கள் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை.
எங்கள் முடிவு மீதான விமர்சனத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. எங்களின் உத்தரவு தெளிவாக உள்ளது. சிறைக்கு திரும்ப தேதி நிர்ணயித்துள்ளோம். இடைக்கால ஜாமின் வழங்குவதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளோம் என்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்