முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று - சோகத்தில் தமிழர் பிரதேசங்கள்
18 வைகாசி 2024 சனி 02:04 | பார்வைகள் : 1909
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்படி, இன்று போரின் இறுதிநாளாக கருதப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி போரின் முடிவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள் போர் வளையத்தில் சிக்கிக்கொண்டனர்.
இதன்போது தமிழ் மக்கள் மீது குண்டு வீசி கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றன. சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போர் வளையத்தில் சிக்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கு மக்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக ஒரு பிடி அரிசி கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த நாட்களில் உணவின்றி தவித்த அவர்கள் வீடுகளில் இருந்துகொண்டு வந்த அரிசியை மட்டுமே பயன்படுத்தி கஞ்சி காய்ச்சிக் குடித்து உயிர் பிழைத்ததுடன் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்திருந்தனர்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வெற்றியை ஒரு குழுவினர் கொண்டாடும் நிலையில், இறுதி யுத்தத்தின் போது தாம் அனுபவித்த கசப்பான நினைவுகளை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
இதன்படி, கடந்த கடந்த 15 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் மே 11 முதல் மே 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் முள்ளிவாயக்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முள்ளிவாய்க்கால் வார இறுதி நிகழ்வுக்கு தமிழ் மக்கள் தயாரகி வருகின்றனர்.
புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், முள்ளிவாய்க்கால் தினத்தையொட்டி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினர் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர முயற்சிக்கும் எந்தவொரு குழுவினரும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.