கட்டிப்பிடிப்பதில் இவ்வுளவு நன்மை இருக்கிறதா..?
18 வைகாசி 2024 சனி 08:49 | பார்வைகள் : 1626
மனிதர்களாகிய நாம் எப்போதுமே அடுத்தவரின் அரவணைப்பை விரும்புவோம். ஒருவர் நம்மை கட்டிப்புடிக்கும் போது அன்பையும், நேசத்தையும், ப்ரியத்தையும் உணர்கிறோம். ஆனால் இப்படி ஒருவரை ஒருவர் அன்போடு கட்டிப்புடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உடல்ரீதியான தொடுதலின் சக்தி குறித்து பலரும் குறைவாகவே மதிப்பிடுகின்றனர்.
இந்த கட்டிப்புடி வைத்தியம் நமக்கு உடலளவிலும், மனதளவிலும் பல நன்மைகளை தரக்கூடியது. மனிதர்கள் என்றில்லை, நமக்குப் பிடித்தமான செல்லப் பிராணிகள் அல்லது போர்வை, தலையணைகளை கட்டிப்புடிப்பது கூட உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் எளிமையான இந்த கட்டிப்புடி வைத்தியம் நமக்கு என்ன மாதிரியான ஆரோக்கியத்தை தருகிறது என்பதை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.
மன அழுத்தம் குறைகிறது: எந்தவிதமான மன அழுத்தங்களையும் குறைக்கும் சக்தி கட்டிப்புடி வைத்தியத்திற்கு இருக்கிறது. இதன் மூலம் நம்முடைய மனநலன் மேம்படுகிறது. சந்தோஷமான உணர்வு அதிகரிக்கிறது. ஒருவேளை நீங்கள் மன அழுத்தத்தோடு இருந்தால், இந்த கட்டிப்புடி வைத்தியத்தை ஒருமுறை முயற்சி செய்து பாருங்களேன்.
இதய நலன் மேம்படும்: நமக்கு பிடித்தமானவரை கட்டிப்புடிக்கும் போது நம்முடைய உடல் ஆக்ஸிடோசினை வெளியேற்றி கார்டிசால் அளவை குறைக்கிறது. இதன் மூலம் நம்முடைய இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
நல்ல தூக்கம்: கட்டிப்புடி வைத்தியம் ஒருவருக்கு பாதுகாப்பு மற்றும் நிம்மதியை தருவதால் இரவில் நமக்கு நல்ல தூக்கம் வருகிறது. இனிமேல் தூக்கம் வரவில்லை என்றால் உங்கள் இணையை கட்டிப்புடித்துக் கொள்ளுங்கள்.
உடல் வலியை குறைக்கிறது: உங்களுக்கு மோசமான காயமோ அல்லது உடல் வலியோ இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்களின் தொடுகை உங்கள் வலியை குறைக்கும்.
உறவுமுறையை பலப்படுத்தும்: காதலர்கள் அல்லது கணவன் மனைவியர் அவ்வப்போது ஒருவருக்கு ஒருவர் கட்டிப்புடித்துக் கொள்வதால் அவர்களின் உறவுமுறையில் நெருக்கம் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்: கட்டிப்புடி வைத்தியத்தை அடிக்கடி பின்பற்றி வந்தால் சளி, காய்ச்சல் மற்றும் பிற வைரல் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
பாலியல் நாட்டம்: உங்கள் உறவுமுறையில் முன்பு போல் ஈர்ப்பு, நெருக்கம் இல்லையா? கவலையே வேண்டாம். கட்டிப்புடி வைத்தியம் இந்தப் பிரச்சனையை எளிதாக தீர்க்கும். அதுமட்டுமின்றி உங்கள் இணையரோடு கொண்டுள்ள பாலியல் உறவையும் இது மேம்படுத்தும். உடல்ரீதியான தொடுகையின் முதல் நிலை கட்டிப்புடி வைத்தியம் தான் என்பதை மறவாதீர்கள்.
இந்த கட்டிப்புடி வைத்தியத்தை நம் இணையோடு மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களோடு ரொமாண்டிக் உறவுமுறையில் இல்லாத மற்ற நபர்களோடும் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும் கூட இந்த கட்டிப்புடி வைத்தியத்தை மேற்கொள்ளலாம். அது லேசான அரவணைப்பாகவோ அல்லது கைகளை இறுகப் பற்றிக்கொள்வதாகவோ அருகில் அமர்ந்திருப்பதோ அல்லது உங்கள் நண்பரின் தோள் மேல் கை போட்டு நடந்து செல்வதாக கூட இருக்கலாம்.
நமக்கு பிடித்தமானவரின் தோள் மேல் சாய்ந்திருப்பது கூட ஒருவகையில் கட்டிப்புடி வைத்தியம் தான். இது உங்களுக்கு மன அமைதியையும், நிம்மதியையும் தரக்கூடியது.