Paristamil Navigation Paristamil advert login

FIFA மகளிர் உலகக் கிண்ணம் 2027 வரவேற்பு நாடாக பிரேஸில் அறிவிப்பு!

FIFA மகளிர் உலகக் கிண்ணம் 2027 வரவேற்பு நாடாக பிரேஸில் அறிவிப்பு!

18 வைகாசி 2024 சனி 09:26 | பார்வைகள் : 1867


2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10ஆவது பீபா (FIFA) மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தை நடத்தும் உரிமம் பிரேஸிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற 74ஆவது பீபா பொதுச்சபை மாநாட்டின்போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி தென் அமெரிக்க நாடொன்றில் நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மிக விரிவான செயல்முறை மற்றும் ஆராய்வுக்குப் பின்னர் பிரேஸிலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

2027 மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு பிரேஸில் தனித்து விண்ணப்பித்திருந்ததுடன் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியன கூட்டாக விண்ணப்பித்திருந்தன.

பீபா மாநாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட பகிரங்க வாக்களிப்பின்போது பிரேஸிலுக்கு 119 வாக்குகளும் கூட்டு விண்ணப்பதாரர்களுக்கு 78 வாக்குகளும் கிடைத்தன.

அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் நடத்தப்பட்ட 2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின்போதும் அதற்கு முந்தைய உலகக் கிண்ணப் போட்டிகளின்போதும் கிடைக்கப்பெற்ற பாராட்டுதல்களுடன் அதன் மூலம் உருவான உத்வேகத்தை தொடர்ந்து கட்டியெழுப்ப FIFA முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பீபா மகளிர் உலகக் கிண்ணப் போட்டி சீனாவில் அங்குரார்ப்பண அத்தியாயம் உட்பட 2 தடவைகளும் (1991, 2007), ஐக்கிய அமெரிக்காவில் 2 தடவைகளும் (1999, 2003), சுவீடன் (1995), ஜெர்மனி (2011), கனடா (2015),பிரான்ஸ் (2019), அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து (2023) ஆகிய நாடுகளில் தலா ஒரு தடவையும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்