லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது
20 வைகாசி 2024 திங்கள் 02:29 | பார்வைகள் : 2361
லோக்சபா தேர்தலின் 5ம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
ஐந்தாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு ஆறு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸ் எம்.பி., உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களம் காண்கின்றனர்.
மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 254 வேட்பாளர்கள் உள்ளனர். இத்தேர்தலில் 8.95 கோடி வாக்காளரகள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்
உ.பி.,யில் 14, மஹாராஷ்டிராவில 13, மேற்குவங்கத்தில் 7, ஒடிசா மற்றும் பீஹாரில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் தலா 1 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மொத்தம் 94,732 ஓட்டுச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. தேர்தல் பணியில் 9.47 லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் காங்., வேட்பாளராக ராகுலும், அமேதியில் பா.ஜ., வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், அவரை எதிர்த்து காங்., சார்பில் கிஷோரி லால் சர்மாவும் களம் காண்கின்றனர்.
உ.பி.,யின் லக்னோவில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் இருந்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், பீஹாரின் ஹாஜிபுரில் இருந்து சிராக் பஸ்வான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இன்று பலப்பரீட்சையை எதிர்கொள்கின்றனர்.
தேர்தலை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.