மீண்டும் கஜோலுடன் இணையும் பிரபுதேவா...

25 வைகாசி 2024 சனி 07:10 | பார்வைகள் : 5805
27 வருடங்கள் கழித்து பாலிவுட் நடிகை கஜோலுடன் மீண்டும் ஜோடி சேர உள்ளார் நடிகர் பிரபுதேவா. இந்த விஷயம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
’மின்சார கனவு’ படத்தில் நடிகர்கள் பிரபுதேவா- கஜோல் ஜோடியை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. குறிப்பாக, ரஹ்மான் இசையில் ‘வெண்ணிலவே...வெண்ணிலவே’ பாடலுக்கு இருவரும் நடனமாடியது இப்போதுள்ள 2கே கிட்ஸ் வரையிலும் ஹிட் தான். இந்த ஜோடி 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் உப்பலபதி பாலிவுட்டில் அதிரடி த்ரில்லர் பாணியிலான படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபுதேவா- கஜோல் இணைந்து நடிக்கின்றனர். இவர்களைத் தவிர நசுருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஆதித்யா ஷீல் உள்ளிட்டப் பலரும் நடிக்கின்றனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் படக்குழு வெளியிட இருக்கிறது.
பிரபுதேவா தமிழில் விஜயுடன் 'GOAT' மற்றும் இசையமைப்பாளர் ரஹ்மானுடன் இணைந்திருக்கும் புதிய படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார். மேலும், பாலிவுட்டிலும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.