Paristamil Navigation Paristamil advert login

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் அபாயம்

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் அபாயம்

25 வைகாசி 2024 சனி 10:28 | பார்வைகள் : 1689


தென்மேல் பருவப்பெயர்ச்சியினால் வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் தாழமுக்கம் இன்று (25) சூறாவளியாக வலுவடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எனவே, மறுஅறிவித்தல் வரை வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடற்றொழிலாளர்களுக்கும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் கூறியுள்ளது.

மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையால் 18 மாவட்டங்களில் 9,616 குடும்பங்களை சேர்ந்த 34, 880 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட அனர்த்தங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அனர்த்த முகாமைத்துவத்திற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக மரங்கள் முறிந்து வீழும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுப்பதற்காக தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வீதிகளை அண்மித்து மரம் நடுதல் தொடர்பில் ஆய்வு செய்து மக்களை தௌிவுபடுத்தி வழிகாட்டல்களை வழங்கும் வகையில் விசேட குழுவை நியமித்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதன்போது, பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் கட்டுமானங்களினால் தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்