இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் மரணம்!

27 வைகாசி 2024 திங்கள் 06:06 | பார்வைகள் : 4121
நடிகர் சரத்குமார் நடித்த ‘மாயி’, 'திவான்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் காலமானார்.நடிகர் ராஜ்கிரண் நடித்த ‘மாணிக்கம்’, சரத்குமார் நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ். இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தை இயக்கினார். பின்பு, இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வருசநாடு’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'எனது நடிப்பில் வெளியான ’மாயி’, ’திவான்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.