டைட்டானிக் கப்பலை பார்க்க செல்லும் மற்றுமொரு அமெரிக்க கோடீஸ்வரர்
30 வைகாசி 2024 வியாழன் 08:26 | பார்வைகள் : 3146
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக மற்றுமொரு அமெரிக்க கோடீஸ்வரர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக டைட்டன் என்னும் நீர்மூழ்கிக் கப்பலில் கடந்த ஆண்டில் ஐந்து பேர் சென்றிருந்தனர்.
ஆனால் அந்த பயணம் அவர்களுக்கு வெற்றியை பெற்றுதரவில்லை.
அந்த நீர்மூழ்கியில் பல குறைப்பாடுகள் காணப்பட்டதால், உள்பக்கமாக வெடித்து கடலில் ஆழத்தின் அழுத்தத்தால் நசுங்கி சிதைந்து ஐந்து பேரும் உயிரிழந்தார்கள்.
அதையடுத்து தற்போது அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரரும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கடலின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள டைட்டானிக் கப்பலின் சிதைவுப் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
டைட்டானிக் கப்பலின் இருப்பிடத்தை பாதுகாப்பாக ஆய்வு செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதே குறித்த கோடிஸ்வரரின் நோக்கமாகும்.
ஓஹியோ ரியல் எஸ்டேட் அதிபர் லாரி கானர் இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்காக $30 மில்லியன் செலவழிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலை ட்ரைடன் நீர்மூழ்கிக் கப்பல்களின் இணை நிறுவனர் பேட்ரிக் லாஹே தயார் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களுடைய பயணம் குறித்த திகதிகள் இது வரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.