வெயில் காலத்தில் கண்களை பாதுகாக்க .....
1 வைகாசி 2024 புதன் 04:30 | பார்வைகள் : 1634
வெயில் அதிகமாக இருப்பதால் சூரியக்கதிர்கள் கண்களில் காயத்தை ஏற்படுத்தி நாளடைவில் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே கண்களை மக்கள் கவனமாக பார்த்துக் கொள்வது என்பது எப்படி என்பது குறித்து இதில் காணலாம்.
வெயில் 42, 43 டிகிரி என நாளுக்கு நாள் பதிவாகி கொண்டே இருக்கிறது. இதனால் கண்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. உலர்ந்த கண்கள், சூரிய கதிர்வீச்சால் ஈரப்பதம் குறைந்து கண்களில் காயம் ஏற்பட்டு நாளடைவில் பார்வை குறைபாடு உட்பட பல பிரச்சனைகள் ஏற்படும் என்கின்றனர் கண் மருத்துவர்கள்.
வெளியில் செல்லும்போது தரமான கருப்பு கண்ணாடி அணிவது,வெளியே சென்று வந்தவுடன் கண்களை சுத்தமான நீரால் கழுவுவது, ஏசி அறையில் இருந்தாலும் அடிக்கடி கண்களை கழுவுவது, கண்களை கைகளால் அழுத்தாமல் இருப்பது,போதுமான சொட்டு மருந்து போட்டுக் கொள்வதன் மூலம் ஈரப்பதத்துடன் வைத்து கண்களை பாதுகாக்கலாம்.
கம்ப்யூட்டர், செல்போன் பார்க்கிறபோது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை மூடி தூரத்தில் உள்ள பொருட்களை பார்ப்பதும் நலம் என்கின்றனர் மருத்துவர்கள். நீச்சல் குளத்தில் குளிக்கும் போது குளோரின் கலந்த நீர் கண்களில் படாமல் இருக்க கண்ணாடி அணிவது கட்டாயம் அவசியம்.
வெயில் காலத்தில் சிகரெட் பிடிப்பது கண்களை மேலும் வறண்டதாக மாற்றிவிடும். காண்டாக்ட் லென்ஸ் வைக்கும்போதும் கழற்றும்போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.வெயிலில் கண்களை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே போதுமான அளவு பழங்கள் நீர்மோர் இளநீர் என உடலையும் கண்களையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது எப்போதும் நலம் பயக்கும்.