2ஜி தீர்ப்பில் விளக்கம் கேட்ட மத்திய அரசு மனு நிராகரிப்பு
3 வைகாசி 2024 வெள்ளி 01:06 | பார்வைகள் : 1495
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, 2012ல் அளித்த தீர்ப்பில் சில விளக்கங்கள் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் பதிவாளர் நிராகரித்து விட்டார்.
தொலை தொடர்பு சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 'முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போது தி.மு.க.,வின் ராசா தொலை தொடர்பு அமைச்சர். தனக்கு வேண்டியவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு போய் சேர வேண்டும் என்பதற்காக அவர், 'முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை' அடிப்படையை பின்பற்றினார் என புகார் எழுந்தது. அதாவது, முதலில் வந்தவர்களுக்கு தரப்படும் என அறிவித்துவிட்டு, அவ்வாறு வந்தவர்களில் பலர் விண்ணப்பமே அளிக்க விடாமல் விரட்டப்பட்டு, வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு தரப்பட்டது என்பது குற்றச்சாட்டு.
பொது சொத்து
இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு நேரிட்டதாக நிபுணர்கள் கூறினர். லட்சம் கோடிக்கு மேல் இழப்பு என தணிக்கை அறிக்கை தெரிவித்தது. புகார்கள் வழக்காக மாறின. சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. 2012ல் தீர்ப்பு வழங்கியது.
'ஸ்பெக்ட்ரம் எனப்படும் 2ஜி அலைவரிசை தொகுப்பு, நாட்டின் பொது சொத்து. அதை ஏலம் வாயிலாக மட்டுமே ஒதுக்க வேண்டும்' என கோர்ட் தெரிவித்தது. யார் அதிக விலை கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தீர்ப்பின் சாராம்சம்.
அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் பொது சொத்துகளை பங்கிட்டு கொடுத்து அரசுக்கு இழப்பு நேராமல் தடுக்க ஏலமே சரியான வழி என தீர்ப்பு கோடிட்டு காட்டியது.
மன்மோகன் சிங் அரசு அந்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தது. அதற்கிடையே, தீர்ப்பு குறித்து ஜனாதிபதி சில விளக்கங்கள் கேட்டிருந்தார். சுப்ரீம் கோர்ட் அவருக்கு விளக்கம் அளித்தது. அதை தொடர்ந்து, மன்மோகன் சிங் அரசு சீராய்வு மனுவை வாபஸ் பெற்றது.
இந்த நிலையில், மோடி தலைமையிலான அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. 'வணிக ரீதியிலான விண்ணப்பதாரர்களுக்கு ஏலம் வாயிலாக அலைவரிசை ஒதுக்குமாறு கோர்ட் கூறியதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை.
லட்சம் கோடி ஊழல்
'ஆனால், நாட்டின் பாதுகாப்பு, தேசிய பேரிடர் போன்ற நெருக்கடி கால தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், தொழில்நுட்ப அல்லது வேறு காரணங்களால் ஏலம் நடத்த முடியாத சூழலிலும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அரசே நேரடியாக ஒதுக்கீடு செய்வது சட்டத்துக்கு உட்பட்டது என்பதையும் கோர்ட் உறுதி செய்ய வேண்டும்' என்பது தான் அந்த மனுவின் சாராம்சம்.
லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், சத்தமில்லாமல் மத்திய அரசு தாக்கல் செய்த இந்த மனு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'மோடி அரசின் வேடம் மாற்றும் திறமைக்கு எல்லையே இல்லை. 2ஜி அலைவரிசை ஒதுக்கீடை மன்மோகன் அரசு தன்னிச்சையாக செய்த காரணத்தால் தான் பல லட்சம் கோடி ஊழல் நடந்தது என்று பிரசாரம் செய்து மத்தியில் ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா கட்சி.
'அலைவரிசை ஒதுக்கீடு செய்ய ஏலம்தான் ஒரே வழி என்ற தீர்ப்பை கைதட்டி வரவேற்ற கட்சி அது. இப்போது, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், பழைய முறைப்படி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய மோடி அரசு துடிக்கிறது. யாருக்காக இந்த துடிப்பு?' என்று காங்கிரஸ் நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ் கேட்டார்.
இந்நிலையில், மத்திய அரசின் மனுவை, விசாரணைக்கான வழக்குகள் பட்டியலில் சேர்க்க சுப்ரீம் கோர்ட் பதிவாளர் மறுத்துள்ளார். 'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, விளக்கம் கேட்பது போல வேறு உருவத்தில் எழுப்ப முயற்சிக்கிறது மத்திய அரசு.
சீராய்வு மனு தாக்கல்
'முன்பிருந்த அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து பின்னர் அதை திரும்ப பெற்ற நிலையில், இந்த மனுவை ஏற்க முடியாது.
'மேலும், தீர்ப்பு வழங்கி 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த மனுவை அளித்துள்ளது. எனவே இது நிராகரிக்கப்படுகிறது' என பதிவாளர் தன் உத்தரவில் கூறியுள்ளார்.
பதிவாளர் நிராகரித்ததை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்ய 15 நாட்கள் அவகாசம் இருக்கிறது. மத்திய அரசு நிச்சயமாக அப்பீல் செய்யும் என சட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
'குறிப்பிட்ட சில பணிகளுக்காக குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால்' என்று கூறி மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
பணிகள் என்னென்ன, சிலர் என்பது யார் என்ற தகவல்கள் வெளிப்படையாக இல்லாததால், மோடி தனது நண்பர்களுக்கு சலுகை விலையில் அலைவரிசை வழங்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.