நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு நான்: சொல்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ்., பாண்டியன்
3 வைகாசி 2024 வெள்ளி 01:07 | பார்வைகள் : 1877
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்,77, தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு சட்டபை மற்றும் லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து ஐந்து முறை முதல்வராக உள்ள நவீன் பட்நாயக், ஆறாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் உள்ளார்.
இவருடைய தனிச் செயலராகப் பணியாற்றியவர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான வி.கே.பாண்டியன், 49. தமிழகத்தில் பிறந்த இவர், டில்லியில் படித்தார்.
பஞ்சாபில் முதலில் பணியில் சேர்ந்தார். ஒடிசாவைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார்.
முதல்வரின் தனிச் செயலராக சிறப்பாக பணியாற்றி, மாநிலம் முழுதும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, தன் பதவியை ராஜினாமா செய்து, சமீபத்தில் கட்சியில் இணைந்தார்.
தற்போது அமைச்சர் அந்தஸ்தில், அரசின் சிறப்பு திட்டங்களின் பொறுப்பாளராக உள்ளார். கட்சியிலும், நவீன் பட்நாயக்குக்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் உள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
நவீன் பட்நாயக் என்னுடைய குரு. அவருடன் நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். அவருடைய சீடனாக, பக்தனாக, ரசிகனாக மாறினேன்.
அவருடைய ஒரு படை வீரனாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன்.
அவருடைய நற்குணங்கள், மக்கள் மீதான அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, நேரந்தவறாமை, நேர்மை என, அனைத்து விஷயங்களிலும் நான் அவருடைய இயற்கையான வாரிசாக உள்ளேன்.
என்னை வெளியாள் என்று பா.ஜ., கூறுகிறது. அவர்கள் அரசியலுக்காக இவ்வாறு கூறுகின்றனர்.
கடந்த, 25 ஆண்டுகளாக நான் ஒடிசாவில் இருந்து வருகிறேன். இங்குள்ள மக்கள், அவர்களில் ஒருவராக என்னை பார்க்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.