ரஃபா தொடர்பில் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்
6 வைகாசி 2024 திங்கள் 14:12 | பார்வைகள் : 1836
ரஃபா பகுதியைவிட்டு மக்கள் இன்னமும் வெளியேறவில்லை அவர்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழிக்கும் முடிவுடன் காஸா நகரில் 6 வாரகாலமாக கடுமையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. இது கடைசி கட்டப் போர் என்றே இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடிவை எட்டாததை அடுத்து, அகதிகளால் நிரம்பியுள்ள ரஃபா பகுதியில் தரைவழித் தாக்குதல் என்பது கட்டாயம் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, ரஃபா தெருக்கள் சடலங்களால் நிரம்பியுள்ளது என்றும், தெரு நாய்கள் சடலங்களை உணவாக்கும் நிலை உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ரஃபா மீது மிகவும் கடுமையான தாக்குதல் ஒன்றை முன்னெடுக்க தங்கள் அரசாங்கம் தயாரெடுத்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஃபாவில் மட்டும் 1.5 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் போருக்கு பயந்து பாதுகாப்பு கருதி ரஃபாவில் திரண்டவர்கள்.
இதனிடையே, 100,000க்கும் மேற்பட்ட குடிமக்கள் நகரின் கிழக்குப் பகுதிகளிலிருந்து விரைவாக வெளியேறுமாறு இஸ்ரேல் கட்டாயப்படுத்தி வருகிறது.
பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் துண்டுச்சீட்டுகளும் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் Muwasi பகுதியில் முகாம்களை அமைக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவமனைகள், உணவு, கூடாரங்கள், குடிநீர் என அனைத்தும் திரட்டப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகள் தற்போது ரஃபா தாக்குதலை கைவிட வேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தமளித்து வருகிறது. பிரதமர் நெதன்யாகு அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.