ஈழவேந்தன் என்று தன்னை அழைத்த தமிழ்த் தேசியவாதி
6 வைகாசி 2024 திங்கள் 14:19 | பார்வைகள் : 1312
இலங்கைத் தீவில் நீதீயையும் சமத்துவத்தையும் அடைவதற்காக தமிழர்கள் நடத்தி நீண்ட போராட்டம் மனக்கிளர்ச்சியைத் தருகின்ற சர்ச்சைக்குரிய பல ஆளுமைகளை முன்னரங்கத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் ஈழவேந்தன் என்று தனக்கு புனைபெயரை வைத்துக்கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல் செயற்பாட்டாளர் மா.க. கனகேந்திரன்.
தமிழ் அரசியலில் ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் இலங்கை பாராளுமன்றத்தில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டுவரை உறுப்பினராகவும் அங்கம் வகித்தார். 90 வயதைக் கடந்த அவர் 28 ஏப்ரில் 2024 கனடாவின் ரொறண்டோ நகரில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்திக்கு இலங்கை தமிழ்ப் பத்திரிகைகள் பரந்தளவில் முக்கியத்துவத்தை கொடுத்தன. சில பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கத்தையும் தீட்டியிருந்தன.
மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற முழுப்பெயரைக் கொண்ட ஈழவேந்தன் 14 செப்டெப்பர் 1932 யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அவரின் தந்தையார் கனகசபாபதி ரயில்வே திணைக்களத்தில் ஒரு ரயில் நிலைய அதிபராக பணியாற்றினார். தாயார் பெயர் சிவயோகம்.
யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த குடும்பம் நல்லூரிலேயே வசித்துவந்தது. கனகேந்திரன் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியிலும் கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிகுந்தவரான அவர் இலங்கை மத்திய வங்கியில் ஒரு மொழிபெயர்ப்பாளராக இணைந்து பிறகு தமிழ் மொழிபெயர்ப்பு பிரிவின் தலைவராக 1980 ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
பதினகவை வயதிலேயே அரசியலால் கவரப்பட்ட கனகேந்திரன் 1952 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்தார். தீவிர பற்றுக்கொண்ட தமிழ்த் தேசியவாதியாக மாறிய அவர் தனிச்சிங்களச் சடடம் கொண்டுவரப்பட்ட பிறகு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளராக மாறினார். தமிழரசு கட்சியின் ' சுதந்திரன் ' பத்திரிகையில் ஈழவேந்தன் என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதத்தொடங்கிய அவர் ஈழவேந்தன் என்ற பெயரிலேயே அரசியல் கூட்டங்களிலும் உரையாற்றினார்.
ஈழம் என்பது இலங்கைத் தீவின் புராதன தமிழ்ப்பெயர். சங்க இலக்கியங்களிலும் இலங்கை ஈழம் என்று குறிப்பிடப்பட்டது. சுதந்திரத்துக்கு முந்திய வருடங்களிலும் சுதந்திரத்துக்கு பின்னரான ஆரம்ப வருடங்களிலும் 'ஈழம் ' என்ற பதத்துக்கு பிரிவினைவாத கற்பிதம் எதுவும் கிடையாது. அது இலங்கையின் புராதன பெயர் மாத்திரமே.
பின்னரான காலப் பகுதியில்தான் சுதந்திர தமிழ் அரசு ஒன்றுக்கான பெயராக ஈழம் என்பது அரசியல் விவாதங்களில் பிரவேசித்தது. தமிழ்த் தேசிய தீவிரவாத இயக்கங்கள் தமிழ் ஈழம் என்றும் இடதுசாரிப் போக்குடைய இயக்கங்கள் ஈழம் என்றும் அழைத்தன. உருவகிக்கப்பட்ட தமிழ்ப் பிரிவினைவாத அரசு வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கியதாகும்.
அதனால் கனகேந்திரன் தனக்கு ஈழவேந்தன் என்று புனைபெயரை வைத்துக்கொண்டபோது அவர் ஈழம் அல்லது தமிழ் ஈழம் என்ற தனிநாட்டை விரும்பிய பிரிவினைவாதியாக இருக்கவில்லை. ஆனால், அவர் ஒரு ஈழம்வாதி என்ற காரணத்தினாலேயே ஈழவேந்தனாக புனைபெயரை வைத்துக்கொண்டார் என்று ஆட்கள் தவறாக எண்ணினார்கள்.
ஈழவேந்தன் என்ற பெயரை ஏன் தெரிவுசெய்தீர்கள் என்று ஒரு தடவை நான் அவரைக் கேட்டேன். என்ன புனைபெயரை வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது ஈழம் என்பது செம்மையான தமிழ்ப் பெயராக இருந்ததால் அதை தெரிவுசெய்ததாக அவர் பதிலளித்தார். தமிழ்க்கவிஞர் பாரதிதாசன் 'பாவேந்தன்' என்று அழைக்கப்பட்டார். அதில் இருந்தே வேந்தன் என்ற பெயரை வைக்கும் சிந்தனை உருவானது.
காலப்போக்கில் கனகேந்திரனை ஈழவேந்தன் கிரகணம் செய்துவிட்டார். எம்.கே. ஈழவேந்தன் என்று அவர் அழைக்கப்பட்டாலும் அவர் உத்தியோகபூர்வமாக அவர் அவ்வாறு பெயரை மாற்றவில்லை. ஈழவேந்தன் படிப்படியாக தமிழ் அரசியலில் பிரபல்யமான ஒருவராக வளர்ச்சி கண்டார். சிறந்த பேச்சாளரான அவர் பல்வேறு மூலங்களில் இருந்து மேற்கோள்களை எடுத்துக்கூறி சபையோரை பரவசப் படுத்தக்கூடியவர். வரலாற்று தகவல்களை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு புதையலாக விளங்கிய அவர் விரல் நுனியில் பெருவாரியான புள்ளிவிபரங்களை வைத்திருந்தார்.
ஈழவேந்தனின் உரைகள் கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானவையாகவும் இருக்கும். தமிழ்ப் பேரறிஞரும் கத்தோலிக்க பாதிரியாருமான வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளார் தனது தமிழ் உரைகளை திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து ஒரு மேற்கோளைக் கூறிக்கொண்டே தொடங்குவார். 'என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே' என்பதே அந்த வரியாகும்.
ஈழவேந்தனும் வரியைக் கூறியவாறே தனது பேச்சுக்களை ஆரம்பிப்பார். உண்மையில் அது அவரின் தனித்துவமான அடையாளமாக இருக்கும். பிற்காலத்தில் அவரது உரைகள் 'ஈழம் வெல்லும், அதை காலம் சொல்லும் ' என்ற வரிகளுடன் முடித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கூட்டணியின் கொழும்புக்கிளை
இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் கொழும்பில் ஈழவேந்தனுடன் நெருக்கமாக ஊடாடினேன். நான் உறுப்பினராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கொழும்புக்கிளையின் தலைவராக ஈழவேந்தன் செயற்பட்டார். அதன் செயலாளராக இருந்த நில அளவையாளர் கே. உமாமகேஸ்வரன் பிறகு 'புளொட் ' என்று அழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவராக வந்தார்.
அந்த நாட்களில் தமிழரசு கட்சி / தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கொழும்புக்கிளை கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டினில் 14 ஆம் இலக்கத்தில் உள்ள தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் வாசஸ்தலத்தில் புதன்கிழமைகளில் மாலை வேளைகளில் அதன் வாராந்தக் கூட்டத்தை நடத்துவது வழமை. பிறகு அந்த கூடடங்கள் பம்பலப்பிட்டி ரோறிஸ் வீதியில் 51 ஆம் இலக்கத்தில் அமைந்திருந்த முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ரி. திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான ஒரு வீட்டில் நடைபெற்றது. இந்தியாவில் சென்னையிலும் ஈழவேந்தனை பல சந்தர்ப்பங்களில் நான் சந்தித்திருந்தேன்.
ஆனால், 2009ஆம் ஆண்டில் இருந்து அவர் கனடாவில் வசித்துவந்த போதிலும், நாம் ஒருவரை ஒருவர் ஒருபோதும் சந்தித்ததில்லை. 2007 ஆம் ஆண்டில் ஈழவேந்தன் முதன்தடவையாக கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்தபோது தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் என்னைப் பெரிதும் புகழ்ந்து பேசினார். தொப்பிக்கல / குடும்பிமலை பற்றி நான் எழுதிய கட்டுரை குறித்து குறிப்பிட்டபோது அவர் ' எங்கடை ஜெயராஜ் ' என்று அன்புடன் கூறினார்.
என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இருவரும் சந்தி்க்கவேண்டும் என்றும் அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் தொலைபேசியில் வந்த அவர் என்னைச் சந்திக்கவேண்டாம் என்று தனக்கு ஆலோசனை கூறப்பட்டதாகத் தெரிவித்தார். உண்மையில் எவரோ ஒருவரோ அல்லது பலரோ அவரது மனதைக் குழப்பிவிட்டார்கள். ' எனக்கு விளங்குகிறது' என்று நான் பதிலளித்தேன். அவ்வளவுதான்.
தான்தோன்றித்தனம்
அரசியலில் ஈழவேந்தன் தான்தோன்றித்தனமான ஒரு தீவிர போக்குடையவராக விளங்கினார். அவ்வப்போது தனது அரசியல் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் தமிழ் இலட்சியத்தின் மீதான அவரின் மெய்யான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் நிலையானவையாக இருந்தன. இளைஞராக இருந்தபோது ஒரு சமஷ்டிவாதியாக விளங்கிய ஈழவேந்தன் அவரது வாழ்வின் பிற்காலத்தில் ஒரு பிரிவினைவாதியாக மாறினார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி 1976 ஆம் ஆண்டில் தமிழ் ஈழத்தைக் கோருவதற்கு முன்னதாகவே அவர் அதற்காகக் குரல்கொடுப்பவராக இருந்தார்.
ஈழவேந்தனின் அரசியல் கோட்பாடு அவர் எழுதிய 'தமிழ்மண் காப்போம்,தாயகம் மீட்போம் ' என்ற தலைப்பிலான சிறிய நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வரலாற்று ரீதியாக தமிழரின் வாழ்விடங்கள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் சிங்களமயப்படுத்தப்பட்டன என்பதையும் அதைத் தடுக்க வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய தனித்தமிழ் நாடு ஒன்று உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் பற்றியதே அந்த நூல். அதில் உள்ளடங்கியிருந்த மறுதலிக்கமுடியாத பெருவாரியான புள்ளிவிபரங்களை அந்த நாட்களில் தமிழ் இளைஞர்கள் மிகுந்த பற்றார்வத்தோடு கிரகித்துக் கொண்டார்கள்.
1965ஆம் ஆண்டில் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் தமிழரசு கட்சி இணைந்தபோது அதை விரும்பாத தீவிரபோக்குடைய இளைஞர் குழுவில் ஈழவேந்தனும் ஒருவர். இந்த அதிருப்தியாளர்கள் 'தமிழ்த்தாய் மன்றம் ' என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்கள். தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் மீது நெருக்குதலைப் பிரயோகிக்கும் ஒரு குழுவாக அது செயற்பட்டது.
தமிழர் சுயாட்சி கழகம்
1968 ஆம் ஆண்டு அன்றைய ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி. நவரத்தினம் தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அதற்குள் ஒரு பிளவு ஏற்பட்டது. தமிழரசு கட்சியின் 'தங்கமூளை ' என்று முன்னர் வர்ணிக்கப்பட்ட நவரத்தினம் தமிழர் சுயாட்சி கழகம் எ்ற பெயரில் புதிய கட்சியை அமைத்தார். தனியான தமிழ் அரசு ஒன்றே அதன் கோரிக்கையாக இருந்தது. தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறிய ஈழவேந்தன் புதிய கட்சியில் இணைந்துகொண்டார். அந்த கட்சியின் 'விடுதலை ' என்ற பத்திரிகையில் அவர் கிரமமாக கட்டுரைகளை எழுதினார்.
புதிய கட்சியின் தேர்தல் பிரசாரங்களில் ஈழவேந்தன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகம் மற்றும் அமிர்தலிங்கம் போன்ற இளம் தலைவர்களை ஈழவேந்தன் ஆவேசமாக தாக்கிப் பேசினார். அவர்தான் முதன்முதலில் செல்வநாயகத்தை 'காற்சட்டைக் காந்தி ' என்று ஏளனமாக வர்ணித்தவர். அந்த நாட்களில் செல்வநாயகத்தை அவரது சீடர்கள் 'ஈழத்துக்காந்தி ' என்று மதித்துப் போற்றினார்கள். இந்தியாவின் மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கையை செல்வநாயகம் பின்பற்றியதே அதற்கு காரணம்.
நவரத்தினம் தலைமையிலான தமிழர் சுயாட்சி கழகம் 1970 பொதுத்தேர்தலில் வடக்கில் பல தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. நவரத்தினத்தினால் தானும் அவரது செல்வாக்கு மிகுந்த ஊர்காவற்துறை தெ்குதியில் வெற்றிபெற முடியவில்லை. சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான புதிய ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்தது. அந்த அரசியலமைப்பு தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவும் தமிழர்களின் மனக்குறைகளை தீர்க்கவும்தவறியது.
அதன் விளைவாக தமிழர்கள் மத்தியில் பெரியளவில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற பிரதான தமிழ்க்கட்சிகள் 1972 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணியை அமைத்தன. 1976 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாக மாறி தமிழ் ஈழக்கோரிக்கை தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழர் விடுதலை கூட்டணியிலோ அல்லது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியிலோ இணைந்து கொள்வதற்கு நவரத்தினம் மறுத்தார். அந்த நேரத்தில் தமிழர்களின் ஐக்கியமே முக்கியமானது என்று உணர்ந்த ஈழவேந்தன் போன்றவர்கள் நவரத்தினத்தின் நிலைப்பாட்டை விரும்பவில்லை. ஈழவேந்தன் தமிழரசு கட்சியில் மீண்டும் சேர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியிலும் சேர்ந்துகொண்டார்.
1977 ஜூலை பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மகத்தான வெற்றிபெற்றது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 19 தொகுதிகளில் ஒன்றைத் தவிர ஏனையவற்தை கூட்டணி கைப்பற்றியது. நாட்டும்பிரிவினையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி அந்த வெற்றியை தமிழ் ஈழத்துக்கான ஆணை என்று வியாக்கியானம் செய்தது. தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்ட ஈழவேந்தன் பேருவகை அடைந்தார்.
1977 ஜூலை வன்செயல்
பொதுத்தேர்தலுக்கு பிறகு சில தினங்களில் 1977 ஆகஸ்ட் வன்செயல் மூண்டது. அதில் ஈழவேந்தன் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். மத்திய வங்கியில் சில சிற்றூழியர்களால் அவர் தாக்கப்பட்டபோது அவரது ஏனைய சிரேஷ்ட சகாக்கள் காப்பாற்றினர். நுகேகொடையில் இருந்த ஈழவேந்தனின் வீடும் வன்முறைக் கும்பலினால் தாக்கப்பட்டது. குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். ஆனால் ஈழவேந்தனின் நூல்கள், செய்திப்பத்திரிகை கத்தரிப்புகள் மற்றும் முக்கியமான அரசியல் ஆவணங்கள் உட்பட அவர்களது பெரும்பாலான உடைமைகள் தீக்கிரையாகின. ஈழவேந்தனும் குடும்பத்தினரும் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிமுகாமில் தஞ்சமடைந்தனர்.
18 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழய் ஐக்கிய விடுதலை கூட்டணி பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கியது. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார். தமிழ் ஈழத்துக்கு மாற்றாக உருப்படியான திட்டம் ஒன்றை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர் கூறினார்.அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன 1979 ஆம் ஆண்டில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பிரதிநிதியாக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அதிருப்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.
தமிழ் ஈழ விடுதலை முன்னணி
அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக 1980 ஆம் ஆண்டில் மாவட்ட சபைகள் அமைக்கப்பட்டன. அந்த திட்டத்துடன் ஒத்துச் செயற்பட்டு தமிழ் ஈழத்தக்கான ஒரு ஒப்பேறக்கூடிய மாற்றாக அது அமையுமா என்று முயற்சித்துப்பார்க்க அமிர்தலிங்கம் விரும்பினார்.ஆனால் அது ஒரு துரோகத்தனமான செயல் என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்குள் ஒரு பலம்வாய்ந்த பிரிவினர் மாவட்டசபை திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஈழவேந்தன்.
இந்த அதிருப்தியாளர்கள் பிரிந்துசென்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு எதிராக தமிழ் ஈழ விடுதலை முன்னணியை அமைத்தனர். யாழ்ப்பாணம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் தந்தைவழி மாமனாரான டாக்டர் எஸ். ஏ. தர்மலிங்கம் அந்த புதிய முன்னணியின் தலைவர்..செயலாளர் ஈழவேந்தன். செல்வநாயகத்தின் மகன் எஸ்.சி. சந்திரகாசன் முன்னணிக்கு ஆதரவை வழங்கினார்.
மாவட்ட அபிவிருத்தி சபைக்கு எதிராக விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாத நிலைப்பாட்டை கடைப்பிடித்த தமிழ் ஈழ விடுதலை முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைப் பொறுத்தவரை ஒரு முள்ளாகவே இருந்தது. சந்திரகாசனுக்கு சொந்தமானதாக இருந்த சுதந்திரன் பத்திரிகையின் ஆதரவும் முன்னணிக்கு கிடைத்தது. அதன் ஆசிரியராக கோவை மகேசன் இருந்தார்.
அதேவேளை, தனது முனைப்புமிக்க தமிழ் தீவிரவாத நிலைப்பாட்டின் காரணமாக ஈழவேந்தன் பிரச்சினைக்குள்ளானார்.இந்தியாவின் அலகாபாத்தில் 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இந்து மகாநாட்டில் உரையாற்றிய அவர் இலங்கையில் இந்து தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார். அவர் கொழும்பு திரும்பியதும் சர்வதேச மகாநாடொன்றில் பங்கேற்பதற்கு முன்னனுமதியைப் பெறத்தவறியமைக்காக மத்திய வங்கியினால் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
அதற்கு பிறகு புதிதாக அப்போது நிறைவேற்றப்பட்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஈழவேந்தன் யாழ்ப்பாண கோட்டையில் தடுத்து வைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது அவருக்காக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அன்றைய தலைவர் எம். சிவசிதம்பரம் முன்னிலையானார். சிவசிதம்பரத்தின் சட்டத்திறமை காரணமாக ஈழவேந்தன் வழக்கில் இருந்து விடுதலையானார். மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட போதிலும் ஈழவேந்தன் 1980 ஆண்டு மத்திய வங்கி பணியில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்தார்.
தடுத்துநிறுத்த முடியாத அவர் அப்போது சுதந்திரப் பறவையாக இந்தியாவுக்கு சென்று தமிழ் ஈழ இலட்சியத்துக்காக பிரசாரங்களை முன்னெடுத்தார்.1981ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரையில் நடைபெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாடடில் ஈழவேந்தன் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் அதிருப்திக்கு ஆளானார்.மகாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் ஈழவேந்தன் ஈழ ஆதரவு பிரசுரங்களை விநியோகித்ததால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அவரை மகாநாட்டு அரங்கில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். நியூயோர்க்கில் 1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் ஈழ மகாநாட்டிலும் ஈழவேந்தன் பங்கேற்றார்.
தமிழர்களுக்கு எதிராக 1983 ஜூலையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களுக்கு பிறகு ஈழவேந்தன் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறி அரசியல் தஞ்சம் கோரினார். சந்திரகாசன் தலைமையிலான அகதிகள் அமைப்பு ஒன்றில் பணியாற்றிய அதேவேளை ஈழவேந்தன் தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார். செலாவாக்குமிக்க பிரமுகர்களைச் சந்தித்து அவர் தமிழ் ஈழ இலட்சியத்தை பிரசாரப்படுத்தினார்.
தோளில் துணிப்பை ஒன்றை தொங்கவிட்ட வண்ணம் காணப்படும் அந்த குள்ளமான உருவம் தமிழ்நாட்டின் பத்திரிகைகள்,சஞ்சிகைகளின் அலுவலகங்களில் பரிச்சயமான ஒருவராக விளங்கினார். இலங்கையில் தமிழர் தொடர்பான நிகழ்வுகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக இந்திய செய்தியாளர்கள் அவரை அடிக்கடி சந்தித்தனர். அதனால் அவர் அவர்களின் நன்மதிப்புக்குரியவரானார். வரலாற்று ரீதியான நிகழ்வுகள் குறித்தும் ஈழவேந்தனிடம் அவர்கள் நிறையவே கேட்டறிந்தனர். சென்னை தமிழ் செய்திப்பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியர் ஈழவேந்தனை ஒரு தடவை இலங்கை தமிழர் விவகாரங்களில் ' நடமாடும் கலைக்களஞ்சியம் ' என்று வர்ணித்தார்.
தமிழ்நாட்டில் அந்த நேரத்தில் ஊடகங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு நிகராக தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பத்திரிகை அறிக்கைகளுக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் அறிக்கைகளுக்கும் பத்திரிகைகள் கொடுத்தன. தங்களிடமிருந்து பிரிந்துசென்ற தமிழ் ஈழ விடுதலை முன்னணிக்கு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்து அமிர்தலிங்கம் அதிருப்தியடைந்தார்.
முக்கியமான இந்திய ஆங்கில பத்திரிகையொன்றின் ஆசிரியரிடம் இது பற்றி நான் கேட்டேன். " இந்த ஆள் ஈழவேந்தன் தனது பத்திரிகை அறிக்கையுடன் எனது அலுவலகத்துக்கு வந்து மணித்தியாலக் கணக்காக காத்திருப்பார். தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் அறிக்கையை பிரசுரம் செய்ய இணங்குவதே அவரை அங்கிருந்து போகச் செய்வதற்கு ஒரே வழி " என்று அவர் பதிலளித்தார்.
இந்த நிலமை இலங்கையில் இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்ட பிறகு மாறிவிட்டது. 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் நிலைமை மோசமடைந்தது. விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டது. பெரிதாக வெளியில் தலைகாட்டாத போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்த போதிலும், தமிழ்நாட்டின் பத்திரிகைகளுடன் ஈழவேந்தன் தொடர்புகளை தொடர்ந்தும் பேணி தகவல்களை வெளிப்படுத்தினார்.
ஈழவேந்தன் முதலில் முதலில் விடுதலை புலிகளின் ஒரு ஆதரவாளர் அல்ல. ஆனால் காலப்போக்கில் அவர் அந்த இயக்கத்தின் அனுதாபியானார். அவர் நெடுமாறன், கோபாலசாமி (வைகோ ) போன்ற நன்கு பிரபல்யமான விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் கைது
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு அனுப்புவதற்காக மருந்துவகைகளை பெறுவதற்கு சதிமுயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஈழவேந்தனும் வேறு நால்வரும் 1997 பெப்ரவரியில் தமிழ்நாடு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட காலம் சிறைவைக்கப்பட்ட பிறகு அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நீண்ட வழக்கு விசாரணைக்கு பிறகு 1999 ஆகஸடில் நீதிமன்றம் அவர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்தது.
இலங்கைக்கு நாடுகடத்தல்
1998 ஆம் ஆண்டில் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா அரசாங்கம் அமைந்த பிறகு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஈழவேந்தன் விடுதலை புலிகளை ஆதரிப்பதில் மேலும் தீவிரம் காட்டத் தொடங்கினார்.2000 டிசம்பரில் சென்னை அரும்பாக்கத்தில் கைதுசெய்ப்பட்ட அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அதற்கு பரந்தளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இந்திய அதிகாரிகள் தளரவில்லை. அதற்கு பிறகு ஈழவேந்தன் இலங்கையில் வாழ்ந்து வரலானார்.
2002 ஆண்டில் நோர்வேயின் அனுசரணையுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்டு சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து ஈழவேந்தன் வெளிப்படையாக தன்னை விடுதலை புலிகளுக்கு ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினார். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட அவர் அடிக்கடி வன்னிக்கு சென்று பிரபாகரன் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்களை சந்தித்துவந்தார்.
தேசியப்பட்டியல் எம்.பி.
இதன் விளைவாக 2004 ஆம் ஆண்டில் ஈழவேந்தனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அந்த பொதுத்தேர்தலில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை கைப்பற்றியதுடன் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைத்தன. 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தபோதிலும், விடுதலை புலிகளின் பொம்மைகள் என்று கருதப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நம்பகத்தன்மை இருக்கவில்லை. பயனுறுதியுடைய முறையில் செயற்படவுமில்லை. அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் அரசியல் சாகசங்களில் ஈடுபட்டார்கள். ஒரு தடவை அவர்கள் பாராளுமன்றத்திற்குள் ஒரு போலி மரணச்சடங்கையும் நடத்திக்காட்டினர். அதில் ஈழவேந்தன் பிணமாக நடிக்க ஏனைய உறுப்பினர்கள் அவரை தூக்கிச்சென்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் ஈழவேந்தனை புதுடில்லி தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாத ஒருவராகவே நடத்தியது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா செல்வதற்கு விசா தேவையில்லை என்பதால் ஈழவேந்தன் தனது இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு விமானத்தில் சென்று இறங்கினார். ஆனால் விமானநிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு அவர் அனுமதிக்கப்படாமல் கொழும்புக்கு விமானத்தில் திருப்பியனுப்பப்பட்டார்.
அவரின் பாராளுமன்ற வாழ்வும் நீண்டகாலம் நிலைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் நீண்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈழவேந்தன் கனடாவுக்கு சென்றார். திரும்பிவருமாறு விடுதலை புலிகள் கேட்டபோதிலும் அவர் தனது வருகையை தாமதித்தார்.அதனால் ஆத்திரமடைந்த விடுதலை புலிகளின் புலனாய்வுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்ற ஒரு சதித்திட்டத்தை தீட்டினார். பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்காக அவர் எடுத்த லீவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகபாடி உறுப்பினர்களினால் புதுப்பிக்கப்படவில்லை.
2007 நவம்பரில் அவர் கொழும்பு திரும்பியபோது அதிர்ச்சி காத்திருந்தது. லீவு அனுமதி பெறாமல் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததால் அவரின் பதவி பறிபோனது. வன்னிக்கு சென்று அவர் வேண்டுகோள் விடுத்தபோதிலும் பயன் கிடைக்கவில்லை. அவரின் இடத்துக்கு ஒரு முஸ்லிம் சட்டதனதரணியான இமாம் நியமிக்கப்பட்டார்.
தென்னாபிரிக்காவில் உண்ணாவிரதம்
ஈழவேந்தனை 2007 கீழ்த்தரமாக நடத்திய விடுதலை புலிகள் 2009 ஜனவரியில் வன்னிக்குள் இராணுவம் விரைவாக முன்னேறத் தொடங்கியதும் அவரது உதவியை நாடினர்.வெளிநாட்டுக்கு சென்று போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அவரால் இயன்றதைச் செய்யுமாறு விடுதலை புலிகள் கேட்டனர். தென்னாபிரிக்காவுக்கு சென்ற ஈழவேந்தன் இலங்கையில் போர்நிறுத்தம் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அந்த பே்ராட்டம் ஒன்பது நாட்களில் முடிவுக்கு வந்தது.2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டனர். அமெரிக்காவுக்கு சென்ற ஈழவேந்தன் அங்கிருந்து கனடாவுக்கு போனார்.
2009 ஆகஸ்டில் கனடாவில் ஈழவேந்தன் அரசியல் தஞ்சம் கோரானார். பல தடவைகள் விண்ணப்பம் செய்தபோதிலும் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில் ஒட்டாவா அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பவில்லை என்பதால் தொடர்ந்து அவர் கனடாவில் தங்கியிருக்கக்கூடியதாக இருந்தது.
கனடாவில் அவர் பெருமளவு அரசியல் மற்றும் கலாசார செயற்பாடுகளில் பங்குபற்றினார். நியூயோர்க்கில் வசிக்கும் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமாரனை "பிரதமராகக் " கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஈழவேந்தன் 2010 மே மாதத்தில் தெரிவு செய்யப்பட்டார். அதனால் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை எதிர்க்கும் கனடாவில் உள்ள புலிகள் ஆதரவு பிரிவுகளிடமிருந்து அவர் தனிமைப்படவேண்டிவந்தது.
2022 செப்டெம்பரில் ஈழவேந்தனின் 90 வது பிறந்தநாள் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டது. அண்மைக்காலமாக அவரின் உடலாரோக்கியம் குன்றத்தொடங்கியதை அடுத்து சில வாரங்களுக்கு முன்னர் ரொறண்டோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ரொறண்டோ வைத்தியசாலை படுக்கையில் ஈழவேந்தனின் உயிர் கடந்த மாதம் 24 ஆம் திகதி பிரிந்தது. மே 4 இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவரத மனைவி அருளாம்பிகை, மகள்மார் யாழினி,எழிலினி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நன்றி வீரகேசரி