செலவின பட்டியலை அனுப்புங்கள்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
8 வைகாசி 2024 புதன் 00:49 | பார்வைகள் : 1860
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணிக்கு செலவிட்ட தொகை பட்டியல் அனுப்பச் சொல்லி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து ஓட்டுப்பதிவு நாள் வரை, பல்வேறு வகைகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் செலவினம் செய்யப்பட்டது.
அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தது; ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு சென்றது; மண்டல குழுக்களுக்கு வாகனங்கள் இயக்கியது; எரிபொருள் நிரப்பியது; அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்தது; பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி, கேமரா பொருத்தியது, ஓட்டுச்சாவடிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்தது உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் செய்யப்பட்டன.
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஒவ்வொருவரும், தேர்தல் பணிக்கு செலவிட்ட வகையில் லட்சக்கணக்கில் பணம் கொடுக்காமல் நிலுவை வைத்திருக்கின்றனர்.
வழக்கமாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான நிதியில், 50 சதவீதம் முன்னரே ஒதுக்கப்படும்; மீதமுள்ள தொகை தேர்தல் பணி முடிந்ததும் வழங்கப்படும். இம்முறை போதிய நிதி ஒதுக்காததால், சிரமமாக இருப்பதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க ஒதுக்கிய நிதி, சக்கர நாற்காலி உதவியாளர்களுக்கு சம்பளம், வி.ஏ.ஓ.,க்களுக்கு நிதி,டெலிபோன் கட்டணம், தேர்தல் விளம்பரம் செய்ததற்கு ஒதுக்கிய நிதியை பட்டியலிட்டுள்ளார்.
மேலும், நிலுவையில் உள்ள பில்களுக்கு இன்னும் கூடுதல் நிதி எவ்வளவுதேவை என்பதை தேர்தல் பணி முடிவதற்குள் பட்டியலிட்டு, உடனடியாக அனுப்பி வைக்க அறிவுறுத்தியிருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் இருந்து செலவின பட்டியல் கேட்டதால், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.