குடிநீர் தட்டுப்பாட்டு தீர்க்க ரூ.300 கோடி!
8 வைகாசி 2024 புதன் 00:58 | பார்வைகள் : 1826
வறட்சி பாதித்த, 22 மாவட்டங்களில் குடிநீருக்கு ஏற்பாடு செய்ய தமிழக அரசு, 300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. குடிநீர் பிரச்னை குறித்து தினமும் தகவல் சேகரித்து, வாரம் ஒரு நாள் கூட்டம் நடத்தி, தீர்வு காணுமாறு கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மழை குறைவு, நிலத்தடி நீர் மட்டம் சரிவு போன்ற காரணங்களின் அடிப்படையில், 22 மாவட்டங்களை வறட்சி பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இம்மாவட்டங்களில் குடிநீர் பணிகளுக்காக ஊரக உள்ளாட்சி துறைக்கு 150 கோடி; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் துறை ஆகியவற்றுக்கு தலா 75 கோடி என, மொத்தம் 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னை குறித்து கடந்த மாதம், 27ம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட துறைகளின் செயலர்கள், 22 மாவட்டங்களிலும் ஆய்வு செய்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவிடம் அறிக்கை அளித்தனர்.
அதன் அடிப்படையில் கலெக்டர்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவை:
* அவசர குடிநீர் பணிகளை உடனடியாக முடித்து, அதற்குரிய நிதியை அரசிடம் பெற்றுக் கொள்ளலாம்
* நிதி ஆணைய திட்டம், உள்ளாட்சி பொது நிதி திட்டம், எம்.பி., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி போன்ற வெவ்வேறு திட்டங்களின் கீழ் நடந்து வரும், குடிநீர் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
* நீர் ஆதாரம் உள்ள அனைத்து கிராமங்களிலும், ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். நீர் ஆதாரம் இல்லாத இடங்களுக்கு லாரிகள் வழியாக குடிநீர் வழங்க வேண்டும்
* தினமும் பகல் 12:00 மணிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் இருந்து குடிநீர் பிரச்னை தொடர்பாக அறிக்கை பெற்று, அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
* ஊரக வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில், குடிநீர் பிரச்னைக்காக அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, 155340 என்ற நம்பரில், பொது மக்கள் தகவல் அளிக்கலாம். மக்களிடம் பெறப்படும் புகார், ஊராட்சிக்கு தெரிவிக்கப்பட்டு, அங்கே இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* பத்திரிகைகளில் வரும் குடிநீர் பிரச்னை தொடர்பான செய்திகள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
* வறட்சி பாதித்தவை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் தலைமையில், திங்கள்தோறும் அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்
* வறட்சி என அறிவிக்காத மாவட்டங்களில், உள்ளாட்சி பொது நிதியில் இருந்து குடிநீர் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
வறட்சி மாவட்டங்கள்
அரியலுார், கோவை, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலுார், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், திருப்பத்துார், திருப்பூர், வேலுார், விழுப்புரம், விருதுநகர்.