கொழும்பு சிறையில் பன்றி இறைச்சி சாப்பிட்ட கைதிகள் திடீர் மரணம்
8 வைகாசி 2024 புதன் 05:12 | பார்வைகள் : 1579
பன்றி இறைச்சி சாப்பிட்ட மகசின் சிறைக் கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு கைதி ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாகவும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த கைதியின் வீட்டிலிருந்து பன்றி இறைச்சியுடன் சோறு பொதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இதை 15 கைதிகளுடன் சேர்த்து சாப்பிட்டனர், அதன் பிறகு மூன்று கைதிகள் நோய்வாய்ப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பன்றி இறைச்சி கறியை உண்பதால் ஏற்பட்ட ஒவ்வாமையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் அதை உண்ட ஏனைய 12 பேருக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் பொரளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் நேற்று பொலிஸ் பிரேத அறையில் இடம்பெற்றன.