வைரலாக மாறியுள்ள எலிசே மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம்..!
13 ஆனி 2024 வியாழன் 05:15 | பார்வைகள் : 3605
எலிசே மாளிகையில் எடுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்று வைரலாக மாறியுள்ளது.
ஐந்து நாட்களுக்கு முன்பாக ஜூன் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி இம்மனுவல் மக்ரோன் தேசிய சட்டமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார். அத்தோடு பொது தேர்தல் ஒன்றையும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்பாக எலிசே மாளிகையில் ஒரு முக்கிய சந்திப்பு ஒன்றில் அவர் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் கேப்ரியல் அத்தால், உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமரும், உள்துறை அமைச்சரும் அருகருகே அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே மக்ரோன் அமர்ந்திருந்தார். இருவரும் மக்ரோனை ‘பரிதாபமாக’ பார்ப்பது போன்று புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்துள்ள இம்மானுவல் மக்ரோனின் கட்சி, ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ள பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பெறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குதிரைக் கொம்பாகிப்போன இந்த நிலையை விபரிக்கும் விதமாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பார்ப்பது போன்று காட்சியளிப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.