நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
13 ஆனி 2024 வியாழன் 08:12 | பார்வைகள் : 1630
நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து அரங்கேறுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் நீட் இருக்கிறது. தமிழக முதல்வர் 2017ம் ஆண்டில் இருந்து நீட் எதிர்ப்பு இயக்கத்தை நடத்துகிறார். பழனிசாமியால் நீட் தேர்வு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வரவில்லை.
குளறுபடி
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தயாரித்து கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளோம். நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து அரங்கேறுகிறது. நடப்பாண்டில் நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
கருணை மதிப்பெண்
67 பேர் எப்படி முழு மதிப்பெண் பெற்றார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பினால், கருணை மதிப்பெண் வழங்கப்படுள்ளது எனக் கூறுகின்றனர். தாமதமாக வருவோரை அனுமதிக்காத நிலையில், பிறகு எப்படி நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது. அவர்களுக்கு ஏன் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. நீட் தேர்வில் பெரிய மோசடி நடந்துள்ளது. உச்சநீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கவில்லை.
பாதிப்பு
நீட் தேர்வில் நடந்த குளறுபடியால் நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கி குளறுபடி நடந்துள்ளது. ஒரு கேள்வி விட்டிருந்தால் 716 மதிப்பெண் கிடைத்திருக்கும். ஒரு கேள்வி தவறாக எழுதியிருந்தால் 715 மதிப்பெண் கிடைக்கும். நீட் தேர்வில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.