ஆந்திராவுக்கு இடம் பெயர பரந்தூர் மக்கள் முடிவு
15 ஆனி 2024 சனி 14:50 | பார்வைகள் : 1973
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவில் இடம் பெயர முடிவு செய்துள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம், பரந்தூரில் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் 5,400 ஏக்கர் தேவை. அதில் 3,750 ஏக்கர் தனியார் வசம் உள்ளது. மீதி அரசுக்கு சொந்தமான நிலம். விமான நிலையத்திற்கு தேவையான நிலம் கையகபடுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுமங்கலம் அடுத்த ஏகனாபுரம் கிராமத்தினர் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நிலம் கையகபடுத்தும் பணி நடந்து வருவதால், தமிழகத்தை விட்டு வெளியேற பரந்தூர், ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போராட்ட குழுவினர் கூறுகையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து தமிழகத்தை விட்டு வெளியேறுகிறோம். விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படும் அரசை கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேறி, ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் அடைய முடிவு எடுத்துள்ளோம்.
ஆந்திர மாநிலத்தை நோக்கி ஜூன் 24ல் கண்ணீர் பயணம் மேற்கொள்ள உள்ளோம். இதற்காக 24ம் தேதி சித்தூர் கலெக்டரை சந்திக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.