Saint-Denis : காவல்துறையினரை தாக்கிய வளர்ப்புநாய்.. துப்பாக்கிச்சூடு!
16 ஆனி 2024 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 3412
வளர்ப்பு நாய் ஒன்று காவல்துறையினரை தாக்கிய நிலையில், அது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று ஜூன் 15, சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. rue Édouard-Vaillant வீதியில் மாலை 7.30 மணி அளவில் இரு காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர்களை திடீரென வளர்ப்பு நாய் ஒன்று தாக்கியுள்ளது.
இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த காவல்துறையினர், தடுமாறி விழுந்துள்ளனர். அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
அதையடுத்து, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு நாயைக் கொன்றனர். குறித்த நாயை அழைத்து வந்த ஒருவரும், நாயின் உரிமையாளரும் என இருவர் (சகோதர்கள்) கைது செய்யப்பட்டனர். குறித்த நாய் முகப்பட்டி அணியாமல் வீதிக்கு அழைத்துவரப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த காவல்துறையினர் Clichy (Hauts-de-Seine) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.