ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் - 8 பேர் பலி
16 ஆனி 2024 ஞாயிறு 22:06 | பார்வைகள் : 3250
மத்திய காசாவில் உள்ள ரபா நகரின் டீர் எல்-பலிகா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் சென்றுகொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் பாதுகாப்பு படைவீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவமானது 2024.06.16 அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.
மேலும், 120 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கையிலும் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் இடையே சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.