Paristamil Navigation Paristamil advert login

மனித தவறா; தொழில்நுட்ப கோளாறா? ரயில் விபத்து விவகாரத்தில் குழப்பம் நீடிப்பு

மனித தவறா; தொழில்நுட்ப கோளாறா? ரயில் விபத்து விவகாரத்தில் குழப்பம் நீடிப்பு

19 ஆனி 2024 புதன் 02:53 | பார்வைகள் : 620


மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்துக்கு காரணம், மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

திரிபுராவின் அகர்தலாவில் இருந்து, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா அருகே உள்ள சீல்தா ரயில் நிலையம் நோக்கி, கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் காலை வந்து கொண்டிருந்தது. ராணிபத்ரா - சத்தார் ஹாட் வழித்தடத்தில் சிக்னலுக்காக எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா ரயில் மீது மோதியது.
மோதிய வேகத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் ஏறி நின்றது. இந்த பயங்கர விபத்தில், சரக்கு ரயிலின் டிரைவர்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

எழுத்துப்பூர்வ ஆவணம்

சரக்கு ரயில் டிரைவர் சிக்னலை கவனிக்காமல் வந்ததே விபத்துக்கு காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் நடந்த விசாரணையில், ராணிபத்ரா - சத்தார் ஹாட் ரயில் தடத்தில் காலை 5:55 மணி முதல் சிக்னல் பழுதடைந்தது தெரியவந்தது. இந்த வழித்தடம் இடையே ஒன்பது சிக்னல்கள் உள்ளன. சிக்னல்கள் பழுதடையும் நேரத்தில், ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருந்து டி.ஏ.912 என்ற எழுத்துப்பூர்வ ஆவணம் ரயில் டிரைவர்களுக்கு வழங்கப்படும்.

அந்த ஆவணம் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட ரயில் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தாலும் நிறுத்தாமல் பயணத்தை தொடரலாம் என்பது ரயில்வே விதி. அந்த ஆவணத்தை பெற்றுக் கொண்ட காரணத்தாலேயே சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தாமல் சிக்னல்களை கடந்து சென்றார் என கூறப்படுகிறது. அதே நேரம், டி.ஏ.912 ஆவணம் வைத்துள்ள டிரைவர், முன்னால் செல்லும் ரயிலில் இருந்து 150 மீட்டர் இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்பது விதி.

மேலும், ஒவ்வொரு சிக்னலை தாண்டும் போதும், ரயிலை மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். பகல் நேரமாக இருந்தால் சிக்னலை கடந்ததும் ரயிலை, 1 நிமிடம் நிறுத்திவிட்டு பின் பயணத்தை தொடர வேண்டும். இரவாக இருந்தால், 2 நிமிடங்கள் நிறுத்திவிட்டு பின் பயணத்தை தொடர வேண்டும். சரக்கு ரயில் டிரைவர் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

மேலும், முன்னால் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றதை அறிந்த நிலையிலும், டி.ஏ.912 ஆவணத்தை வழங்கிய ஸ்டேஷன் மாஸ்டர், எந்த அடிப்படையில் அதை அளித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை முன்னால் சென்ற கஞ்சன்ஜங்கா ரயில் அந்த ரயில்வே பிரிவை கடந்து அடுத்த பிரிவுக்கு சென்றிருக்க கூடும் என நினைத்து, அவர் ஆவணம் வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு

அதோடு, முன்னால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் எதற்காக நடுவழியில் நிறுத்தப்பட்டது என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. விபத்துக்கு காரணம் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், வடகிழக்கு ரயில்வே பிராந்தியத்தின் பாதுகாப்பு பிரிவு தலைமை கமிஷனர் ஜனக் குமார் கர்க், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை இன்று துவங்க உள்ளார். இந்த விசாரணையில் விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் என நம்பப்படுகிறது.
காலையில் அப்படி!


நேற்று முன்தினம் விபத்து நடந்த அடுத்த சில மணி நேரங்களில், ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சரக்கு ரயிலின் டிரைவர், சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்படும்,” என்றார்.


மாலையில் இப்படி!

நேற்று முன்தினம் மாலையில், ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'கஞ்சன்ஜங்கா ரயில் சென்ற வழித்தடத்தில், அதிகாலையில் இருந்தே சிக்னல்கள் செயல்படவில்லை. சிக்னல்கள் பழுதடையும் நேரத்தில், ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருந்து டி.ஏ.912 என்ற எழுத்துப்பூர்வ ஆவணம் ரயில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆவணம் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட ரயில் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தாலும் நிறுத்தாமல் பயணத்தை தொடரலாம் என்பது ரயில்வே விதி. அந்த ஆவணத்தை பெற்றுக் கொண்ட காரணத்தினாலேயே சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தாமல் சிக்னல்களை கடந்து சென்றார். ஆனால், அவர் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லாமல், அதிவேகத்தில் சென்றது தான் விபத்துக்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்