ஆங்கில வழியில் கல்வி கற்பது தற்கொலைக்கு சமம்: சக்லானி
19 ஆனி 2024 புதன் 02:56 | பார்வைகள் : 2046
தாய் மொழியில் கற்காமல், ஆங்கில வழியிலேயே கல்வி கற்பது தற்கொலைக்கு சமம்' என பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டங்களை வகுத்து தரும், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தலைவர் சக்லானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நீண்டகாலமாகவே நம் நாட்டில் ஆங்கிலவழிக் கல்வி மீது பெற்றோருக்கு ஒரு ஈர்ப்பு, மோகம் உள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், தகுதியான ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், ஆங்கில வழியிலேயே தங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுத்தர விரும்புகின்றனர்; இது தற்கொலைக்கு சமம்.
அரசுப் பள்ளிகளில் நல்ல தரமான கல்வி வழங்கப்படுகிறது. ஆங்கிலவழிப் படிப்புகளில் அதிகளவு பாடங்கள் திணிக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் அறிவாய்ந்தவர்களாக இருப்பதில்லை. தங்களுடைய கலாசாரம், தங்களுடய மண்ணின் மூலங்களுடனான தொடர்பை இழக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை, தாய்மொழியில் கற்பதன் வாயிலாக, மாணவர்களுக்கு அதில் உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கும். மேலும், சிறந்த முறையில், எளிதில் கற்க முடியும்.
இதைத்தான், புதிய தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. மாணவர்கள் தங்களுடைய தாய்மொழியில் படிப்பதுடன், மற்ற மொழிகளையும் கற்க வேண்டும். படங்கள், கதைகள், பாடல்கள் வாயிலாக பாடத்தைக் கற்கும்போது, அதுவும் தாய்மொழியில் கற்கும்போது, சிறந்த அறிவை மாணவர்கள் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.