Paristamil Navigation Paristamil advert login

மாணவர்கள் நெற்றியில் திலகம், கையில் கயிறுக்கு தடை: அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரை

மாணவர்கள் நெற்றியில் திலகம், கையில் கயிறுக்கு தடை: அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரை

19 ஆனி 2024 புதன் 13:47 | பார்வைகள் : 2133


பள்ளியில் மாணவர்கள் நெற்றியில் திலகம், கையில் கயிறுக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரை செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவனை, சக மாணவர்கள் வீடு புகுந்து, அரிவாளால் வெட்டிய சம்பவம், மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு சார்பில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

குழு அறிக்கையை, நீதிபதி சந்துரு நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அறிக்கை, 650 பக்கங்கள் உடையது. மாணவர்கள் நலன் கருதி, உடனடியாக தீர்க்க வேண்டிய 20 பரிந்துரைகள், நீண்ட காலத்தில் தீர்க்க வேண்டிய மூன்று பரிந்துரைகள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.


அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* கள்ளர் மறுசீரமைப்பு பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்றவற்றை நீக்கி, அரசு பள்ளி என அழைக்க அரசாணை வெளியிட வேண்டும்.
* பள்ளி பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே, புதிய பள்ளி துவங்க அனுமதி அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு ஜாதி பெயர் இருந்தால், அதை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளும், பள்ளிக்கல்வி துறையின் கீழ் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.
* உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஜாதி அதிகமாக உள்ள பகுதிகளில், அதே சமூகத்தை சேர்ந்தவர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, மாவட்டக் கல்வி அலுவலராக, தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, சமூக நீதி சார்ந்த, அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்.
* தலைமை ஆசிரியர்கள் பட்டியலின, பழங்குடியின மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆய்வு செய்து, ஆண்டறிக்கை தயார் செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரி, பல்கலை ஆசிரியர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்.

* சமூக பிரச்னைகள், ஜாதிய பாகுபாடு, பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் தடுப்பு போன்றவை குறித்து ஆசிரியர்களுக்கு கட்டாயம் பயிற்சி தர வேண்டும்.


மாணவர்கள் இருக்கை

* மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும், ஜாதி பெயர் இடம்பெறக் கூடாது. ஆசிரியர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக, மாணவர்களின் ஜாதியை குறிப்பிடும் வகையில், அவர்களை அழைக்கக்கூடாது.
* வகுப்பறையில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெயர்களை அறிவிக்கக்கூடாது. மாணவர்களின் ஜாதி விபரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
* மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும். ஜாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வர்ணம் தீட்டக் கூடாது.
* அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், பள்ளி வளாகத்திற்குள் அலைபேசி எடுத்து வர தடை விதிக்க வேண்டும்.

* ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கண்டிப்பாக அறநெறி வகுப்புகள் நடத்த வேண்டும். வட்டாரத்திற்கு ஒரு பயிற்சி பெற்ற ஆலோசகரை நியமிக்க வேண்டும்.


சமூக நீதி மாணவர் படை

* 'மாணவர் மனசு' என்ற தலைப்பில், மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்க வேண்டும். அதை பள்ளி நல அலுவலர் வாரத்திற்கு ஒரு முறை திறந்து, அதில் வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் மாணவர்கள் பெயரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

* பள்ளியில் சமூக நீதி மாணவர் படை உருவாக்க வேண்டும். இதில், அனைத்து சமுதாய மாணவர்களும் இடம்பெற வேண்டும். அவர்களுக்கு தனி சீருடை, பயிற்சி போன்றவை வழங்கப்பட வேண்டும்.


தடை

* அனைத்து பள்ளி நிறுவனங்களையும், கல்வி அல்லாத பயன்பாட்டிற்கு அனுமதிக்க கூடாது.

* ஜாதி பிரச்னை அதிகம் உள்ள பகுதிகளில், அரசு சிறப்பு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும். அப்பிரிவு ஜாதி பிரச்னை ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து, பிரச்னை ஏற்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீண்ட கால பரிந்துரை

* ஜாதி பாகுபாட்டை ஒழிக்க, கல்வி நிறுவனங்களில் அனைத்து மாணவர்களையும் கண்காணிக்கும் வகையில், தனி சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.
* துவக்கப் பள்ளிகள் மீதான முழு கட்டுப்பாட்டை உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டும். பணியாளர்களை நியமித்தல், பணி அமர்த்துதல், நீக்குதல் உள்ளிட்ட, பள்ளிகளின் மீதான முழு கட்டுப்பாடு ஊராட்சி ஒன்றியங்களிடம் இருக்க வேண்டும்.

* கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதி பெயர்களை தடுக்க, தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்