கள்ளச்சாராய பலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
20 ஆனி 2024 வியாழன் 07:44 | பார்வைகள் : 2170
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியனவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 17 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் மருத்துவமனைகளில், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். சேலம் மருத்துவமனையில் 8 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 19 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சிபிசிஐடி அதிகாரி
இந்த வழக்கை, சிபிசிஐடி வசம், தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை செய்த புகாரில், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட பிரசாந்த், கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் டாக்டர்கள் வந்து கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
3 பேர் கைது
கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி, தாமோதரன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், விஜயா என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
அவசர ஆலோசனை:
இந்நிலையில், கள்ளச்சாராய பலி குறித்து அமைச்சர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்த பின், இந்த ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. பலியானவர்களுக்கு நிவாரணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.