Paristamil Navigation Paristamil advert login

கின்னஸ் சாதனை நிகழ்ச்சி சினிமா ஆகிறதா?

கின்னஸ் சாதனை நிகழ்ச்சி சினிமா ஆகிறதா?

20 ஆனி 2024 வியாழன் 09:07 | பார்வைகள் : 1376


'வெங்காயம்' என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சங்ககிரி ராஜ்குமார். தற்போது தனி ஒரு ஆளாக 'தி ஒன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தினார். உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனை படைத்தது. இந்த கின்னஸ் சாதனையின் நிகழ்வுகளை கொண்டு ஒரு படம் இயக்க இருப்பதாக ராஜ்குமார் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: என்னுடைய இயக்கத்தில் வெளியான 'வெங்காயம்' எனும் படத்தில் தெருக்கூத்து கலையைப் பற்றியும், கலைஞர்களைப் பற்றியும் அழுத்தமாக விவரித்திருந்தேன். நான் திரைத்துறைக்கு வருகை தந்த பிறகு தான் தெருக்கூத்து கலையின் அசலான மதிப்பினை உணர்ந்தேன். இது அழிந்து வரும் கலை, நலிவடைந்து வரும் கலை, என சொல்வதை விட இதற்கு ஆக்கப்பூர்வமாக நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்.

அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள 300 கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி அளித்து, சிகாகோ நகரில் 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் முன்னிலையில் தெருக்கூத்து கலையினை அரங்கேற்றினோம். அங்கு கின்னஸ் சாதனையாளர்களுக்கான ஆய்வுக் குழுவினர் வருகை தந்தனர். நிகழ்ச்சியை முழுவதுமாக உன்னிப்பாக கண்காணித்து, வெளிநாடுகளில் ஒரே தருணத்தில் அதிகமான கலைஞர்கள் கலந்து கொண்டு மேடையில் நிகழ்த்திய தெருக்கூத்து கலை மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி இதுதான் என கின்னஸ் சாதனைக்கான சான்றிதழையும் அங்கீகாரத்தையும் அளித்தனர்.

இந்த அங்கீகாரம் கிடைத்த போது இதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சியில் திளைத்தோம். கின்னஸ் சாதனை படைத்த இந்த நிகழ்வுகளை கொண்டு ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறேன். அத்தனை சுவாரஸ்யங்கள் அதில் இருக்கிறது. அதோடு தெருக்கூத்து கலையை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் அந்த படம் உதவும். என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்