மத்தியத்தரைக்கடல் பகுதியில் அகதிகள் படகுகள் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் பலி - 64 பேர் மாயம்
20 ஆனி 2024 வியாழன் 15:27 | பார்வைகள் : 2896
தெற்கு இத்தாலியின் மத்தியத்தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியதில் பதினொரு அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மன் தொண்டு நிறுவனம், இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜெர்மன் உதவிக் குழுவின் நாதிர் மீட்பு கப்பல் இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது அங்கு படகு ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருந்த படகிலிருந்து 51 பேரை மீட்டதோடு, அதில் மயக்கமடைந்த இருவர் உட்பட கப்பலின் கீழ் தளத்தில் 10 உடல்கள் சிக்கியிருந்ததாக ஜேர்மன் உதவிக் குழுவான RESQSHIP தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்தவர்கள் இத்தாலிய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு திங்கட்கிழமை காலை கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்த படகில் சிரியா, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு லிபியாவில் இருந்து படகு சென்றுள்ளது.
இதேவேளை, இத்தாலியின் கலாப்ரியாவில் இருந்து கிழக்கே சுமார் 200 கி.மீ. (125 மைல்) தொலைவில் துருக்கியில் இருந்து புறப்பட்ட இரண்டாவது படகு தீப்பிடித்து கவிழ்ந்துள்ளது.
அந்த படகிலிருந்த 64 பேர் கடலில் காணாமல் போயுள்ளதோடு, 11 பேரை இத்தாலிய கடலோர காவல்படையினர் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதில், உயிரிழந்த பெண்ணின் உடலும் இருந்துள்ளது. விபத்துக்குள்ளான இரண்டாவது படகில் ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகதிகள் சென்றுள்ளனர்.
மத்திய தரைக்கடல் உலகின் மிக ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துக்கள்படி, 2014 முதல் 23,500 க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய தரைக்கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.