Paristamil Navigation Paristamil advert login

கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் எதற்கு நிவாரணம் தரணும்?: பிரேமலதா துணிச்சலாக கேள்வி

கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் எதற்கு நிவாரணம் தரணும்?: பிரேமலதா துணிச்சலாக கேள்வி

20 ஆனி 2024 வியாழன் 16:46 | பார்வைகள் : 1167


கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் என்பது தவறான முன்னுதாரணம். பின்விளைவுகளை தெரிந்தே சாராயம் குடிப்பவர்களுக்கு எதற்கு நிவாரணம் தர வேண்டும்' என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா துணிச்சலாக கேள்வி எழுப்பி உள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்த சம்பவம் நடை பெற்றாலும் அதிகாரிகள் தான் பலிகடா?. அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது தான் நடவடிக்கையா?. கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார். அப்படியென்றால் கள்ளச்சாராயத்தை முதல்வர் ஊக்குவிக்கிறாரா? இது தவறான முன்னுதாரணம்.

அதிகாரிகளை மாற்றுவதோ, ரூ.10 லட்சம் கொடுப்பதோ இதற்குத் தீர்வல்ல. அரசும், போலீசாரும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர, தடுப்பதில்லை. தேர்தல் அரசியல் மட்டும் தான் தமிழகத்தில் நடக்கிறது. தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவேன் என திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. அது என்னவானது?. சிகிச்சையில் இருப்பவர்களிடம் எதற்காக இதைக் குடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, விலை மலிவாகக் கிடைத்ததால் குடித்தோம் என்றார்கள்.

கண்துடைப்பு
ஏற்கெனவே, மரக்காணம் போன்ற இடங்களில் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது, கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், இன்று இத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இந்த அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது. அனைத்தும் கண்துடைப்பு நாடகம். முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் கேட்கும் போது, பின் விளைவுகள் தெரிந்தே, கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தை எதற்கு நிவாரணமாக தர வேண்டும் என பிரே மலதா துணிச்சலாக கேட்டுள்ளார்.

அப்படி கொடுப்பது என்றால் ஆளும் கட்சியினர் தங்களது சொந்த பணத்தில் இருந்து கொடுக்க வேண்டியது தானே என்று பலரும் கேட்கின்றனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்