பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்ததாக குற்றம் - ஒருவரை உயிருடன் எரித்த கும்பல்
21 ஆனி 2024 வெள்ளி 09:26 | பார்வைகள் : 2488
பாகிஸ்தானில் பக்துன்க்வாவின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள Madyan பகுதியில் குர்ஆனை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கும்பல் ஒன்று உயிருடன் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்தில் 8 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட நபரின் பெயர் முகமது இஸ்மாயில் என்றும், அவர் Madyanனைப் பார்க்க வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் மக்களின் புகாரின் பேரில் பொலிஸார் அவரைக் கைது செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கிடையில் குர்ஆனை அவமதித்ததாகக் கூறப்படும் செய்தி காட்டுத்தீ போல அந்தப் பகுதி முழுவதும் பரவியது.
பொலிஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறிது நேரத்தில் கோபமடைந்த கும்பல் பொலிஸ் நிலையத்தைத் தாக்கி, சந்தேக நபரை தங்களுடன் அழைத்துச் சென்றது. இதன் போது அந்த கும்பல் பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்கி தீ வைத்தது.
முதலில் முகமது இஸ்மாயிலை தாக்கிய கும்பல், பின்னர் அவரை எரித்ததாக அதிகாரிகள் தெறிவித்துள்ளனர்.
பாதி இறக்கும் வரை அந்த கும்பல் அவரை அடித்தது. இதையடுத்து, கூட்டத்தில் இருந்த சிலர் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வந்து இஸ்மாயில் மீது ஊற்றி எரித்துள்ளனர்.
இஸ்மாயில் தான் ஒன்றும் செய்யவில்லை என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் ஆனால் அந்தக் கும்பல் அதைக் கேட்கவில்லை. அவர் இறக்கும் வரை கும்பல் வெளியேறவில்லை.
இதைத்தொடர்ந்து கும்பல் அதன் காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவியது. தற்போது அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை நாங்கள் அறிந்துள்ளோம், மேலும் இது தொடர்பாக உள்ளூர் காவல்துறையினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்று கைபர் பக்துன்க்வா முதல்வர் அலி அமீன் கந்தாபூர் கூறினார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அவசரகால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி இந்த சம்பவம் முழுவதையும் பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ளார்.